குட்கா விவகாரத்தில் 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு

மொத்தம் 17 அதிகாரிகள் குட்கா உற்பத்தியாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Update: 2017-10-10 07:20 GMT
சென்னை,

தமிழ்நாட்டில் பான் மசாலா, குட்கா விற்பனை செய்வதற்கும் சேமித்து வைப்பதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. என்றாலும் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் குட்கா தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சில குட்கா தயாரிப்பு தொழிற்சாலைகள் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக புகார் கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் செங்குன்றத்தில் உள்ள குட்கா தயாரிப்பு தொழிற் சாலையில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது குட்கா தயாரிப்பு பங்குதாரர்களில் ஒருவர் வீட்டில் டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியில் குட்கா விற்பனையை எந்த வித இடையூறும் இல்லாமல் செய்வதற்கு லஞ்சம் வழங்கப்படும் முழு விபரமும் இடம் பெற்றிருந்தது. 2015, 2016-ம் ஆண்டுகளில் எந்தெந்த உயர் அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது என்ற விபரமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வருமான வரித்துறை அதிகாரிகள், அந்த லஞ்சத்தை கணக்கிட்ட போது 2 ஆண்டுகளில் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ரூ.39 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப் பட்டிருந்தது கண்டு பிடிக் கப்பட்டது. இதையடுத்து இந்த தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகன ராவுக்கு அனுப்பி வைத்தனர். அதோடு லஞ்சம் வாங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

அந்த கடிதத்தில் ஒரு அமைச்சர், இரண்டு டி.ஜி.பி. அந்தஸ்து போலீஸ் அதிகாரிகள் உள்பட பலரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இதனால் இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படாமல் இருந்தது.

இதற்கு  தி.மு.க., பா.ம.க. சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கோர்ட் டிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில் தி.மு.க.வினர் சட்டசபையில் குட்கா பாக்கெட்டுகளை எடுத்து காண்பித்து பரபரப்பு ஏற்படுத்தினார்கள். குட்கா விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி அறிய சி.பி.ஐ. விசாரணை  நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து குட்கா விற்பனை மற்றும் லஞ்சம் கை மாறியது பற்றி விசாரணை நடத்த ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் ஊழல் தடுப்பு பிரிவினர் 2 பிரிவாக விசாரணையைத்  தீவிரப்படுத்தினார்கள்.

இதற்காக வருமான வரித்துறையிடம் இருந்து மீண்டும் தகவல்கள் பெறப்பட் டன. அதை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவில் வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 109-ன் கீழ் உட்பிரிவு 13(1)(ஏ), 13(1)(டி), மற்றும் 13(2) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 17 அதிகாரிகள் குட்கா உற்பத்தியாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், வணிக வரித்துறை  அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மத்திய சுங்க வரித்துறை அதிகாரிகளின் பெயர்கள் அந்த 17 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கின் பிரதான குற்றவாளிகளாக ஒரு அமைச்சரும், இரண்டு போலீஸ் உயர் அதிகாரிகளும் கருதப்படுகிறார்கள். அவர்கள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக டைரியில் குறிப்புகள் இருந்ததாம்.

அந்த டைரியின் அந்த பக்கங்களும் காணாமல் போய் விட்டன. அமைச்சர் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையில் அவர்களது பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் வலையில் இருந்து திமிங்கலங்கள் தப்பி விட்டன. சின்ன மீன்கள் சிக்கியுள்ளன.

மேலும் செய்திகள்