சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்து: ‘காசநோய் இல்லாத சென்னை’ திட்டம்

‘காச நோய் இல்லாத சென்னை’ திட்டத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2017-10-09 22:45 GMT

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

காச நோய் இல்லாத சென்னையை உருவாக்க பெருநகர சென்னை மாநகராட்சி, தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், ‘ரீச்’ தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, யூ.எஸ்.ஏ.ஐ.டி, ஸ்டாப் டி.பி. பார்ட்னர்ஷிப் என்ற சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக சென்னை மாநகராட்சியில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் முதல் கட்டமாக, காசநோய் உள்ளதை துரிதமாக கண்டறிதல். இரண்டாம் கட்டமாக, நோயாளிகளுக்கு 6 மாதங்கள் அல்லது 8 மாதங்கள் சிகிச்சை அளித்து குணமடையும் வரை அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், ஊட்டச்சத்துள்ள உணவுக்கும் ஏற்பாடு செய்தல்.

மூன்றாவது கட்டமாக, காசநோய் எளிதில், அதிகமாக தாக்கக்கூடிய குடிசைவாழ் பகுதி மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று, அவர்களை பரிசோதனை செய்து, தேவை இருந்தால், அவர்களுக்கு ஊடுகதிர், சளிப்பரிசோதனை செய்தல். இப்பணிக்காக 7 நடமாடும் ஊர்திகள் வாங்க உத்தேசிக்கப்பட்டு இருக்கிறது. நான்காம் கட்டமாக, காசநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, அதை கண்டு பயம் கொள்ளாமல், நோயாளிகளை ஒதுக்காமல் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நடவடிக்கைகளை அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் செயல்படுத்த ‘ரீச்’ நிறுவனத்துடன் பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னையில் இந்த திட்டம் சுமார் 600 தனியார் மருத்துவமனைகள், 2 ஆயிரம் தனியார் ஆய்வக கூடங்கள், 2 ஆயிரம் மருந்தகங்களில் உள்ளது. 12 ஆயிரம் டாக்டர்களும் உள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பயிற்சி அளிக்கவும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படும் சி.பி.என்.ஏ.ஏ.டி. பரிசோதனையை, தனியாரில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் கொண்டு சேர்க்கவும் ‘ரீச்’ அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் காசநோய் குறித்த தற்போதைய நிலை, நடவடிக்கைகள் செயல்படுத்திய பிறகு உள்ள நிலை பற்றிய ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு செய்ய இந்த ஒப்பந்தம் மூலம் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு ரூ.1½ கோடி வழங்கப்பட இருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்கு ரூ.26 கோடி மானியத்தை யூ.எஸ்.ஏ.ஐ.டி. நிறுவனம் சென்னை மாநகராட்சிக்கு வழங்க உள்ளது. முதல்கட்டமாக 10 சி.பி.என்.ஏ.ஏ.டி. கருவிகள் சென்னை மாநகராட்சிக்கு வழங்குகிறது. இதற்கு ரூ.1½ கோடி மானியத்தில் ஸ்டாப் டி.பி. பார்ட்னர்ஷிப் வழங்கியுள்ளது. இதற்கு தேவையான காட்ரேஜ் ரூ.4½ கோடி மானியத்தில் வழங்கி உள்ளது.

சென்னை மாநகராட்சியில் இந்த பரிசோதனை அரசு மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கும் இலவசமாக செய்து தரப்படும். இதன் மூலம் சென்னை வாழ்மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

இந்த திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் நேற்று மத்திய சுகாதார ஆராய்ச்சி துறையின் செயலாளர் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் முன்னிலையில், சி.பி.என்.ஏ.ஏ.டி. மருத்துவ கருவியை வழங்க அதை சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்