தையல் பிரிந்ததால் பயன்படுத்த முடியவில்லை: மெத்தை வாங்கியவருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

சென்னை சேலைவயல் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன்.

Update: 2017-10-07 22:15 GMT

சென்னை,

சென்னையில் உள்ள மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

வியாசர்பாடி பகுதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரபலமான நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வரும் மெத்தை ஒன்று வாங்கினேன். அதன் விலை 4 ஆயிரத்து 850 ரூபாய் ஆகும்.

இந்தநிலையில் மெத்தை வாங்கிய சில வாரங்களில் மெத்தையின் 3 பகுதிகளில் இருந்த தையல் பிரிந்து உள்ளே இருந்த தென்னை நார் வெளியே வர தொடங்கியது. இதனால் அதை பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து அந்த நிறுவனத்திடம் புகார் செய்தேன். மெத்தையை மாற்றி கொடுப்பதாக நிறுவனத்தின் பிரதிநிதி தெரிவித்தார். ஆனால் மாற்றி கொடுக்கவில்லை. வாரண்டி இருந்தும் மெத்தையை மாற்றி கொடுக்காததால் அதற்கான தொகையை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும். மன உளைச்சலுக்காக உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜெயபாலன் விசாரித்தார். முடிவில், ‘மனுதாரருக்கு மெத்தைக்கான தொகை 4 ஆயிரத்து 850 ரூபாயை சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடாகவும், ஆயிரம் ரூபாய் வழக்கு செலவுக்காகவும் வழங்க வேண்டும். இந்த தொகையை ஆண்டுக்கு 9 சதவீத வட்டி என்ற அடிப்படையில் 6 வாரத்துக்குள் வழங்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்