தமிழகத்தில் தனியார் பள்ளிகளை மூட வேண்டும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

நவோதயா பள்ளிகளை அனுமதிக்கவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை மூட வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2017-10-06 22:15 GMT
சென்னை,

பா.ம.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கோ.ரவிராஜ், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்னை துறைமுக பொறுப்புக்கழக விருந்தினர் இல்லத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.

அவர்களை பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். அப்போது பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ் கர்ணா, மாநில ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத் உள்பட பலர் இருந்தனர்.

அதைத் தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தீர்கள். ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லையே?

பதில்:- மீனவ சமுதாயத்துக்கு செய்ய வேண்டிய அனைத்து தேவைகளையும் தனிக்கவனம் செலுத்தி செய்து வருகிறோம். ஒரு தனி அமைச்சகம் இருந்தால் எப்படி தேவைகளை சந்திக்குமோ? அதேபோல் நாங்கள் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்கிறோம்.

கேள்வி:- ஜெயலலிதா மரணம் அடைவதற்கு முன்பு வரை ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை அவர் அனுமதித்தது கிடையாது என்றும், இப்போது உள்ளவர்கள் அனுமதிக்கிறார்கள் என்றும் பலர் குற்றஞ்சாட்டுகிறார்களே?

பதில்:- யார் சொன்னது? ஜெயலலிதா இருந்த போது ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தப்பட்டு இருக்கிறது.

கேள்வி:- தமிழக அரசின் தற்போதைய செயல்பாடு எப்படி இருக்கிறது?

பதில்:- டெங்கு பாதிப்பில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தியாக வேண்டும். டெங்குக்கு சரியான மருந்து கொடுக்க வேண்டும். காலம் தாழ்ந்த முனைப்பாக அரசின் செயல்பாடு இருக்கிறது.

கேள்வி:- நவோதயா பள்ளிகளை தொடங்குவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருக்கிறாரே?

பதில்:- மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா நவோதயா பள்ளிகளை கொண்டு வருவதில் தவறு இல்லை என்று சொன்னார். அது திறக்கப்படவில்லை என்றால் தமிழக அரசாங்கம் தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். அதேபோல் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை என்றால், தனியார் பள்ளிகளை மூடிவிடுங்கள். நவோதயா பள்ளிக்கு நிகராக பள்ளிகளை தமிழகத்தில் திறக்க அரசு சொல்லட்டும் பார்ப்போம். அதை சொல்ல தி.மு.க - அ.தி.மு.க. வுக்கு யோக்கியதை இருக்கிறதா?

கேள்வி:- கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் பற்றி....

பதில்:- அரசியலுக்கு வருகிறவர்கள் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனின் நடவடிக்கை இருக்க வேண்டும். திரைப்பட புகழை வைத்து அரசியலில் வெற்றி பெற முடியாது.

கேள்வி:- கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருடன் கமல்ஹாசன் சந்திப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மேலும் தன்னுடைய இணைப்பு காவியாக இருக்காது என்று கமல்ஹாசன் கூறி இருக்கிறாரே?

பதில்:- அவர் இணைப்பு காலியாகவும் இருக்க கூடாது. காவியில் பாவமும் இல்லை. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து அவரிடம் பாடம் கற்றுக்கொள்வது சரியல்ல.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்