தமிழகத்தின் புதிய கவர்னராக ஏற்க உள்ள பன்வாரிலால் புரோஹித் சென்னை வந்தார் முதல்வர் வரவேற்றார்

தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் சென்னை வந்தடைந்தார்.

Update: 2017-10-05 09:00 GMT
தமிழகத்தின் புதிய கவர்னராக  நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் சென்னை வந்தடைந்தார்.

தமிழக பொறுப்பு கவர்னர் கடந்த ஓராண்டு காலம் இருந்து வந்த வித்யாசாகர் ராவ் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய கவர்னராக  பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து பொறுப்பு கவர்னர்  வித்யாசாகர் ராவ் இன்று காலை 9.30க்கு விடைபெற்றார். அவருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவருக்கு பிரிவு உபசாரி விழா நடத்தி, வழியனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இன்று பிற்பகல் 1.30க்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்பட அனைத்து அமைச்சர்களும் தனித் தனியே பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் கிண்டி ராஜ்பவன் வந்தார்.  

நாளை காலை 9.30 மணிக்கு தமிழகத்தின் கவர்னராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு தமிழக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமானம் செய்து வைக்க உள்ளார்.

மேலும் செய்திகள்