மர்ம காய்ச்சலுக்கு 5 சிறுமிகள் உள்பட 7 பேர் பலி

மர்ம காய்ச்சலுக்கு 5 சிறுமிகள் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2017-10-04 22:15 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகள் ஷிவானி (வயது 8). 2-ம் வகுப்பு படித்து வந்தாள். மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுமி ஷிவானி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று ஷிவானி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.

ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகள் நித்யா (15). இந்த சிறுமி சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நித்யா நேற்று இறந்தார்.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வரும் வினய்பிரசாத்துக்கு (22) சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. அவர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் மர்ம காய்ச்சலுக்கு 400-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாளையங்கோட்டையை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகள் சரசுவதி (4). எல்.கே.ஜி. படித்து வந்தாள். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி சரசுவதி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி சரசுவதி இறந்தாள்.

தென்காசியை சேர்ந்தவர் அபுல்ஹாசன் சாதலி. இவருடைய மகள் பாத்திமாவுக்கு (3) சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பாத்திமா சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தாள்.

திண்டுக்கல் மாவட்டம் கம்பிளியம்பட்டியை சேர்ந்த செல்வம். அவருடைய மகள் நந்தினி (11). 5-ம் வகுப்பு படித்து வந்தார். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி நந்தினி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் மர்ம காய்ச்சல் பாதிப்பால் 110 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 230 பேர் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருப்பூரை அடுத்த தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் கவுதம்ராஜ் (14). 9-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுவன் கவுதம்ராஜ் ஒரு வாரமாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் கவுதம்ராஜ் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

திருவொற்றியூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் அனில். கூலி தொழிலாளி. இவருடைய மகன் குல்சன் (3). சிறுவன் குல்சனுக்கு சில நாட்களாக காய்ச்சல் விட்டு விட்டு வந்துள்ளது. இதனால் எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட குல்சன் நேற்று இறந்தான்.

மேலும் செய்திகள்