ஊழலுக்கு துணை போகும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கே எதிர்ப்பு - டிடிவி தினகரன் தரப்பு வாதம்

ஊழலுக்கு துணை போகும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கே எதிர்ப்பு, ஆட்சிக்கு எதிராக கிடையாது என டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டு உள்ளது.

Update: 2017-10-04 09:18 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் புகார் அளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். தகுதி நீக்கத்தை தடுத்து நிறுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் முறையீட்டனர். வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெறுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இன்று சபாநாயகர் தரப்பில் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டினர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பழனிசாமி - பன்னீர்செல்வம் இணைந்த தினத்தன்றே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சதித்திட்டம் தீட்டினர். ஆட்சியை கவிழ்ப்பேன் என்று டிடிவி தினகரன், தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் வெளிப்படையாக பேசியதை ஆதாரங்களோடு குறிப்பிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் பதில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து 18 பேர் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடுகையில், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது அரசியல் சட்டத்துக்கு எதிரானது, தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு முரண்பாடாக உள்ளது. 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்த போது தற்போது துணை முதல்-அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் எதிராக வாக்களித்தனர். இது தொடர்பாக சபாநாயகரிடம் அ.தி.மு.க. கொறடா புகார் செய்தார். ஆனால் ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விளக்கம் கேட்டு நோட்டீஸ் கூட அனுப்பப்படவில்லை. இப்போது 18 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் கொடுக்கப்பட்ட அந்த சில நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது உள்நோக்கமானது இவ்வாறு அவர் வாதிட்டார்.

தி.மு.க. சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஏற்கனவே மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை முதலில் விசாரித்தால் நன்றாக இருக்கும் என்றார். அதற்கு நீதிபதி, அந்த வழக்கில் ஏற்கனவே தடை உத்தரவை கோர்ட்டு பிறப்பித்துள்ளது, எனவே அதை முதலில் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் 18 பேரும் செயல்படவில்லை, ஊழல் நிறைந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்றுதான் கூறி இருந்தனர்.

எனவே கட்சி தாவல் தடை சட்டத்தில் 18 பேர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. சபாநாயகர் நடுநிலை வகிக்க தவறி விட்டார். அவர் அனுப்பிய நோட்டீசுக்கு 4 முறை எம்.எல்.ஏ.க்கள் ஆட்சேபனை தெரிவித்தும் அதை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டார். சபாநாயகர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், தடை விதிக்க வேண்டும் என்றார். நோட்டீஸ் அனுப்பியது முதல் தகுதி நீக்க உத்தரவு வரை எந்த நடவடிக்கையும் சட்டப்படி மேற்கொள்ளப்படவில்லை எனவும் டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது. முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்த ஜக்கையன், அவர்கள் பக்கம் சென்றதால் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் குறிப்பிடப்பட்டது. 

சபாநாயகரிடம் கொறடா அளித்த புகாரின் நகலை எங்களிடம் காண்பிக்கவில்லை எனவும் டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது. எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கின் விசாரணை மதிய இடைவேளைக்கு பின்னரும் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்