ஆட்சி கலைப்பு குறித்து புதிய கவர்னரிடம் தி.மு.க. வலியுறுத்துமா? மு.க.ஸ்டாலின் பதில்

ஆட்சி கலைப்பு குறித்து புதிய கவர்னரிடம் தி.மு.க. வலியுறுத்துமா? என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

Update: 2017-10-02 23:30 GMT
ஊட்டி,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குன்னூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சில்வர் ஓக் மரங்கள் வெட்டும் ஒப்பந்தத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறதே?

பதில்:- சில்வர் ஓக் மரங்கள் திட்டத்தில் முறையாக டெண்டர் விடாமல், குதிரை பேர ஆட்சியில் உள்ள அமைச்சர்களும், அதிகாரிகளும் சிண்டிகேட் அமைத்து, கோடி கோடியாக கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் ஏற்கனவே இந்தச்செய்தியை இங்குள்ள தி.மு.க. நிர்வாகிகள் என்னிடத்தில் தெரிவித்த உடனே அதனைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன். சட்டமன்றத்திலும் தி.மு.க. சார்பில் பிரச்சினையை எழுப்பியிருக்கிறோம். அதன்பிறகு, தற்காலிகமாக இந்தத்திட்டம் நிறுத்தப்பட்டதாக தெரியவந்தது.

கேள்வி:- ஊட்டியில் உள்ள மரங்களுக்கு எல்லாம் எண் குறிப்பிட்டு இருக்கிறார்கள் ஆனால், அதுபற்றி வெளிப்படையாக வெள்ளை அறிக்கை எதுவும் வெளியிடவில்லையே?

பதில்:- முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, 110 விதியினைப் பயன்படுத்தி பல அறிவிப்புகளை எல்லாம் வெளியிட்டார். அதைப் பின்பற்றி இப்போதுள்ள குதிரை பேர அரசின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்தபோதும், பல அறிவிப்புகளை வெளியிட்டனர். ஆனால், அந்தத்திட்டங்கள் எந்த நிலையில் இருக்கின்றன, அதற்காக எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, என்பதை எல்லாம் நாங்கள் தொடர்ந்து சட்டமன்றத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறோம். வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

கேள்வி:- மேட்டூர் அணையை காலம் கடந்து திறந்து விட்டதால் விவசாயிகளுக்கு எந்தப் பயனுமில்லை என்று விவசாயிகள் கூறி வருகிறார்களே?.

பதில்:- விவசாய மக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயிருக்கிறார்கள். நியாயமாக, ஜூலை 12-ந்தேதி மேட்டூர் அணையைத் திறந்திருக்க வேண்டும். ஆனால், காலம் கடந்து இப்போது திறந்திருப்பதால் எந்தப் பலனுமில்லை. விவசாயிகள் வாங்கியிருக்கும் கடன்களை எல்லாம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். அய்யாகண்ணு தலைமையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசோ, மாநில அரசோ அவர்களை அழைத்துப் பேசி, ஒரு சுமுகமான முடிவைக் கொண்டு வரக்கூடத் தயாராக இல்லை. இது மிகவும் வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

கேள்வி:- திருப்பூர் பின்னலாடைத் தொழில் முடங்கியுள்ளதே?

பதில்:- இங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கூட அதுபற்றி குறிப்பிட்டேன். பின்னலாடைத் தொழில் நசுங்கி போயுள்ளது. அதேபோல, தமிழக நெசவாளர்கள் இந்த ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தி.மு.க. ஆட்சி வரும்போது, நிச்சயமாக இதற்கெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, சுமுகமான சூழல் ஏற்படுத்தப்படும்.

ரஜினிகாந்த்-கமல்ஹாசன்

கேள்வி:- இந்த ஆட்சியை கலைக்க புதியதாக பொறுப்பேற்க உள்ள கவர்னரிடம் வலியுறுத்துவீர்களா?

பதில்:- பொறுப்பு கவர்னர் இருந்தபோது என்ன கோரிக்கையை வலியுறுத்தினோமோ அதையே இப்போதும் வலியுறுத்துகிறோம். இங்குள்ள அரசியல் சூழ்நிலைகள் அவருக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். குறிப்பாக, இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. 4-ந்தேதி (நாளை) கிடைக்கும் தீர்வினைப் பொறுத்து, அடுத்தகட்டமாக கவர்னரை சந்திக்க வேண்டுமா அல்லது அவரை சந்திக்காமலேயே ஒரு சுமுகமான சூழ்நிலை வருமா என்பதைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.

கேள்வி:- அமைச்சர் ஜெயகுமார் நடிகர்கள் ரஜினி-கமல் ஆகியோர் எம்.ஜி.ஆர். -சிவாஜி போல என்று ஒப்பிட்டு இருக்கிறாரே?

பதில்:- அதே ஜெயகுமார் ஓரிரு தினங்களுக்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்துப் பேசியிருக்கிறார். இப்போது இப்படிப் பேசியிருக்கிறார். குதிரை பேர அரசின் முதல்-அமைச்சர் எடப்பாடி தலைமையில் உள்ள அமைச்சர்கள் எல்லா விஷயத்திலும் மாறி மாறி எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்