சிவாஜி கணேசன் சிலையில் இருந்து கருணாநிதி பெயர் அடங்கிய கல்வெட்டை அகற்றுவதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

சிவாஜி கணேசன் சிலையில் இருந்து கருணாநிதி பெயர் அடங்கிய கல்வெட்டு அகற்றப்பட்டு இருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2017-09-30 23:15 GMT
சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கருணாநிதியின் கரங்களால் திறந்து வைக்கப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை பீடத்தில் இருந்த கருணாநிதி பெயர் அடங்கிய கல்வெட்டை அகற்றியிருக்கும் சட்டவிரோத அ.தி.மு.க. அரசுக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெரும்பான்மையை உற்பத்தி செய்து, ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள குறுகிய மனப்பான்மையை இந்த அநாகரிகமான செயல் வெளிப்படுத்தியிருக்கிறது. பராசக்தியில் கருணாநிதிக்கும் -நடிகர் திலகத்திற்கும் துவங்கிய பாசத்தை இது போன்ற இழிவான செயல்களால் எல்லாம் எடப்பாடி பழனிசாமி போன்றோர் தமிழ் திரையுலகத்தினரின் மனதிலிருந்து நீக்கிவிட முடியாது என்பதை முதலில் அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நட்பின் அடையாளமாகவும், தமிழ் திரையுலகத்தின் சாதனைகள் அகில உலகத்திற்கும் தெரிய வேண்டும் என்ற ஆர்வத்துடனும் சென்னை மெரினா கடற்கரையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை கருணாநிதி திறந்துவைத்தார். அவருடையை சிலையையும் அகற்றி, தற்போது அந்த சிலை பீடத்தில் இருந்த கருணாநிதியின் பெயரையும் நீக்கியிருப்பது இந்த அரசுக்கு உள்ள வஞ்சக நெஞ்சத்தை எடுத்துக்காட்டுகிறது.

அந்த மாபெரும் கலைஞனின் சிலையை முக்கிய இடத்தில் இருந்து நள்ளிரவில் அகற்றி, அந்த விழாவையும் நயவஞ்சகத்துடன் சிறுமைப்படுத்துவது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையும், நடிகர் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களையும் அவமானப்படுத்தியிருக்கும் செயல். இதுபோன்ற சிறுப்பிள்ளைத்தனமான அரசியல் விளையாட்டுகளால் மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துகொண்டிருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் திரையுலகம் ஒரு போதும் மன்னிக்காது.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்