எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

Update: 2017-09-29 00:15 GMT
சென்னை,

மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் நாராயணன், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.

அதில், ‘அரசு சார்பில் கொண்டாடப்படும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் கூட்டத்தை காண்பிப்பதற்காக அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் இதுபோன்ற அரசியல் பொது நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்ல இடைக்கால தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்த தடையை நீக்கக்கோரி தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை துணைச் செயலாளர் பி.சேகர் நேற்று முன்தினம் அவசரமாக ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அதில், ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தன்னம்பிக்கை பேச்சாளர்கள் மூலம் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இது மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைப்பதற்கும், தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும், போட்டித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும் வழிகாட்டியாக இருக்கும். எனவே, ஐகோர்ட்டு பிறப்பித்த தடையை நீக்கிவிட்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு மாணவ-மாணவிகளை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று அரசு வக்கீல் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து நேற்று ஐகோர்ட்டுக்கு தசரா விடுமுறை என்ற போதிலும் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜரானார்.

இதன்பின்பு நீதிபதிகள் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் இதுபோன்ற அரசியல் பொது நிகழ்ச்சிகளுக்கு அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துச்செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளில் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளவும், இந்த நிகழ்ச்சியையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் பரிசுகளை பெறுவதற்கும் எந்த தடையும் இல்லை.

அதேபோன்று, தனிப்பட்ட முறையில் மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடனோ அல்லது நண்பர்களுடனோ இந்த விழாவில் கலந்து கொள்ளவும் தடை இல்லை. சீருடை மற்றும் அடையாள அட்டையுடன் பள்ளியில் இருந்து மொத்தமாக மாணவ-மாணவிகளை அழைத்து செல்ல மட்டுமே இந்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க நிகழ்ச்சிகளை நடத்துவதை நாங்கள் தவறு எனக்கூறவில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்விதம் முறையாக இருக்க வேண்டும். அரசு விழாக்களை அந்தந்த பள்ளி வளாகத்திலேயே குறைந்த எண்ணிக்கையில் பார்வையாளர்களை வைத்து நடத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்த வழக்கின் பிரதான மனு அடுத்த ஆண்டு(2018) பொங்கல் விடுமுறைக்கு பின்னர் தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்