காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்தது.
பென்னாகரம்,
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 17 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் சின்னாற்று பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. நேற்று பகலில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை நீர்வரத்து மேலும் அதிகரித்து, வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
கண்காணிப்பு
நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஐந்தருவி, சினிபால்ஸ் அருவி, மெயின் அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நிலையில் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் நீர்வரத்தின் அளவை மத்திய நீர்வளத்துறையினர் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்தனர்.
நீர்வரத்து கணிசமாக அதிகரித்து இருப்பதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் கரையோரம் குளிப்பதை தவிர்க்குமாறு போலீசார் எச்சரித்தனர். அதே நேரத்தில் ஒகேனக்கல் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.