சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு ம.தி.மு.க. மாநாட்டில் வைகோ அறிவிப்பு
சென்னையில் நவம்பர் 20-ந் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்படும் என்று வைகோ கூறியுள்ளார்.
தஞ்சாவூர்,
ம.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 109-வது பிறந்த நாள் விழா மாநாடு தஞ்சை மாநகராட்சி திடலில் நேற்று நடந்தது. ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
மாநாட்டில், மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் எனும் நிலையில் இருந்து தமிழகத்திற்கு முழுவிலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து கல்வித்துறையை முழுமையாக மாநில அதிகார பட்டியலுக்கு மாற்ற வேண்டும். காவிரி மரபு உரிமையை நிலைநாட்ட காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு அமைத்திட வேண்டும் என்பது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-
நதிகள் இணைப்பு
இன்று அரசியல் கட்சியினர், திரை உலகை சேர்ந்தவர்கள் நதிகள் இணைப்பை பற்றி கூறுகிறார்கள். அதை நான் வரவேற்கிறேன். ஆனால் இந்திய பாராளுமன்றத்தில் 67 ஆண்டுகளில் இதுதொடர்பான மசோதா கொண்டுவரப்பட்டதா? ஒரே ஒருமுறை அது தொடர்பான மசோதாவை நான் கொண்டுவந்தேன்.
அதனை மத்தியில் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் அரசு ஏற்றது. எனவே நதிகளை இணைக்கும் முயற்சியில் இப்போது ஈடுபடுவோம். நதி நீர் தொடர்பாக அண்டை மாநிலங்களுடன் பிரச்சினை உள்ளது. ஆனால் இதில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாநில சுயாட்சி மாநாடு
மாநில சுயாட்சியை நசுக்க நினைக்கிறது மத்திய அரசு. மாநில சுயாட்சி தத்துவத்தை காப்பாற்ற சென்னை காமராஜர் அரங்கில் நவம்பர் 20-ந் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்படும். இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் முதல்-அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்தியாவின் எதிர்காலத்தை காக்க, இந்தியாவின் மதச்சார்பின்மையை காக்க, கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட, ஜனநாயகத்தை காக்க, திராவிட கொள்கைகளை காப்பாற்ற பாடுபடுவோம்.
போராட வேண்டும்
ஷேல் எரிவாயு, மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற திட்டங்களை தமிழகத்தில் நுழையவிடாமல் தடுக்க இளைஞர் சமுதாயம் மற்றும் விவசாயிகளை போராட தூண்டிவிடுவேன். இதை நான் பதவிக்காகவோ, ஓட்டுக்காகவோ சொல்லவில்லை. நமது மாநிலம் அழிந்துவிடாமல் காக்க நாம் போராட வேண்டும்.
தமிழர்களுக்கு எங்களைப் போன்று சேவை செய்த இயக்கம் எதுவும் கிடையாது. பாசிஷ நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்துக்கு வரும் ஆபத்தை ம.தி.மு.க.வால் மட்டுமே தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.