1,013 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
1,013 உதவி மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சென்னை,
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பி, அரசு மருத்துவ நிலையங்களுக்கு வரும் ஏழை-எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ஜனவரி 2012-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்த வாரியம், இதுவரை 9 ஆயிரத்து 777 மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள், 9 ஆயிரத்து 190 செவிலியர்கள் உள்பட 22 ஆயிரத்து 42 பணியாளர்களை தேர்வு செய்துள்ளது.
ஏழை, எளியோருக்கு...
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தற்போது 1,013 உதவி மருத்துவர்களை புதியதாக தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்- அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசு, இன்றைக்கு சுகாதாரத் துறையிலே சிறந்த சேவையை செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் தமிழகம்தான் முதன்மை வகிக்கிற அளவிற்கு சிறப்பான மருத்துவர்களால் சேவையாற்றப்பட்டு வருகிறது. புதிதாக ஆணை பெற்றிருக்கின்ற மருத்துவர்கள், கிராமப்புறத்திலே சேவை செய்து, கிராமப்புறத்தில் வாழ்கின்ற ஏழை, எளியோருக்கு சிறப்பான முறையிலே சிகிச்சை அளித்து மக்கள் போற்றுகின்ற அளவிற்கு உங்கள் பணி அமையவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதிகாரிகள்
இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் (பொறுப்பு) மோகன் பியாரே, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் பி.அமுதா, மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குனர் டாக்டர் கே.குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் பி.பானு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் (இ.எஸ்.ஐ.) டாக்டர் இன்பசேகரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.