சென்னை ஆஸ்பத்திரியில் ம.நடராஜனுக்கு தீவிர சிகிச்சை
ம.நடராஜனுக்கு சிறுநீரகம் செயலிழந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சென்னை,
அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளரான சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங் மருத்துவ கல்லூரி மற்றும் குளோபல் மருத்துவமனையில் பணியாற்றும் பிரபல கல்லீரல் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் அவரை பரிசோதித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அவரை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ம.நடராஜன் (வயது 74) நீண்ட காலமாக கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக கடந்த 6 மாதமாக எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கல்லீரல் செயல்திறன் குறைந்ததை தொடர்ந்து, அதன் விளைவாக ஏற்பட்டுள்ள சிறுநீரக செயலிழப்பு மற்றும் சுவாச கோளாறு காரணமாக தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு டயாலிசிஸ் மற்றும் இதர தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக, தமிழக அரசின் உறுப்புதான பதிவேட்டின், காத்திருப்போர் பட்டியலில் அவருடைய பெயர் பதிவேற்றப்பட்டுள்ளது. பிரபல கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ரேலா தலைமையிலான நிபுணர்கள் கண்காணிப்பில் அவர் உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.