திருச்சியில் நடைபெற இருந்த டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு

திருச்சியில் 16–ந் தேதி நடைபெற இருந்த டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கட்சி நிர்வாகிகள் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2017-09-11 23:00 GMT
திருச்சி,

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி, வருகிற 16–ந் தேதி திருச்சி தென்னூர் உழவர்சந்தை திடலில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்து இருந்தார். 

 இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டி டி.டி.வி.தினகரன் ஆதரவு அ.தி.மு.க.(அம்மா) மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், மனோகரன், ராஜசேகர் மற்றும் சாருபாலா தொண்டைமான் உள்பட 20–க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நேற்று காலை திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் சென்று மனு அளித்தனர். 

அப்போது போலீசார் அவர்களிடம், ‘‘உழவர்சந்தை திடலில் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து முறைப்படி மாநகராட்சியில் ஒப்புதல் பெறவேண்டும். அந்த ஒப்புதலை பெற்றுக்கொண்டு வாருங்கள்’’ என்று கூறினார்கள். 

அனுமதி மறுப்பு

இதையடுத்து மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் திருச்சி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கோ–அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையர் பிரபாகரனை சந்தித்து, மாநகராட்சிக்கு சொந்தமான உழவர்சந்தை திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்க கோரி மனு அளித்தனர். 

அதனை படித்து பார்த்த அவர், ‘‘16–ந் தேதி மற்றொரு அமைப்பினர் உழவர்சந்தை திடலில் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டுள்ளதால் அன்றைய தினத்தில் உங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது’’ என்று கூறினார்.

வாக்குவாதம்

இதனால் அவர்கள் உதவி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பொதுக்கூட்டம் நடத்த, அமைச்சர்களின் தூண்டுதலின் பேரில் திட்டமிட்டே அதிகாரிகள் அனுமதி மறுக்கிறார்கள். இதுகுறித்து எங்கள் துணை பொதுச்செயலாளரிடம் தெரிவித்துள்ளோம். பொதுக்கூட்ட தேதியை மாற்றி வைக்கலாமா? அல்லது வேறு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தலாமா? என்பது குறித்து அவரே முடிவு செய்வார்’’ என்றார்.

மேலும் செய்திகள்