மெரினா கடலில் மூழ்கி 3 மாணவர்கள் சாவு

போலீசார் எச்சரிக்கையை மீறி மெரினா கடலில் குளித்த 3 மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி மூழ்கி இறந்தனர்.;

Update: 2017-09-11 21:45 GMT
சென்னை,

சென்னை கோவிலம்பாக்கம், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பெருமாள் என்பவருடைய மகன் தனுஷ்குமார்(வயது 14) 9–ம் வகுப்பு படித்துவந்தார். அதேபகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரின் மகன் ஆகாஷ்ராஜ்(14). 7–ம் வகுப்பு படித்துவந்தார். உறவினர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் தங்கள் குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு வந்தனர்.

அப்போது, சிறுவர்கள் இருவரும் கடலில் குளிக்க வேண்டும் என பெற்றோரிடம் அடம்பிடித்தனர். இதனால் அவர்களும் கடலில் குளிக்க அனுமதித்தனர். நீச்சல் குளத்திற்கு பின்பகுதியில் உள்ள கடலில் சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் உற்சாக மிகுதியில் கடலின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர்.

போலீசார் எச்சரிக்கை

அப்போது ரோந்துவந்த கடலோர பாதுகாப்புபடை போலீசார் சிறுவர்களை கண்டித்ததுடன், அவர்களது பெற்றோரிடம் கடல் அலையின் சீற்றம் அதிகமாக உள்ளதால் சிறுவர்களை கடலில் குளிக்க விடாதீர்கள் என எச்சரித்தனர். போலீசாரின் அறிவுரையை கேட்காமல் பெற்றோர் அவர்களை கடலில் தொடர்ந்து குளிக்க அனுமதித்தனர்.

சிறுவர்கள் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஒரு ராட்சத அலை 2 பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த அவரது பெற்றோர் கூச்சல் போட்டனர்.

உடல் கரை ஒதுங்கியது

அங்கிருந்த ஒருவர் அருகில் உள்ள மீனவர்களுடன் சேர்ந்து கடலுக்குள் இறங்கி 2 சிறுவர்களையும் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. சில மணி நேரத்திற்கு பிறகு ஆகாஷ்ராஜ் உடல் கரை ஒதுங்கியது.

அண்ணாசதுக்கம் போலீசார் ஆகாஷ்ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட தனுஷ்குமாரை மீனவர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்

அதேபோல், நேற்று முன்தினம் மெரினா கடற்கரைக்கு நண்பர்களுடன் வந்த திருவண்ணாமலையை சேர்ந்த முருகதாஸ் என்பவரின் மகன் சக்திவேல்(18) என்பவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். அவரது நண்பர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

போலீசார் மீனவர்களின் உதவியுடன் சிறிது நேரத்தில் கல்லூரி மாணவரான சக்திவேலின் உடலை மீட்டனர். இதுகுறித்தும் அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்