‘நதிகளை மீட்போம்’ விழிப்புணர்வு கூட்டம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ‘நதிகளை மீட்போம்’ விழிப்புணர்வு கூட்டம் இன்று நடக்கிறது.

Update: 2017-09-09 21:00 GMT
சென்னை,

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ‘நதிகளை மீட்போம்’ விழிப்புணர்வு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

தேசிய நதிகளை மீட்டு, மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்ய வேண்டும் என்ற நோக்கில் ‘நதிகளை மீட்போம்’ எனும் தலைப்பில் தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கத்தை, ‘ஈஷா’ யோகா மையம் முன்னெடுத்தது. அதன்படி கடந்த 3-ந்தேதி கோவையில் இந்த விழிப்புணர்வு பேரணியை மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன் தொடங்கிவைத்தார்.

‘ஈஷா’ யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் நாடு முழுவதும் வாகன பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது அவரே கார் ஓட்டி செல்கிறார். அவரோடு வழியில் பொதுமக்களும், பல தலைவர்களும், பிரபலங்களும் கலந்துகொள்கிறார்கள். 16 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த பயணம் அடுத்த (அக்டோபர்) மாதம் 2-ந்தேதி டெல்லியில் முடிவடைகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பேரணி, கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் முக்கியமான இடங்களுக்கு சென்ற இந்த விழிப்புணர்வு பேரணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையை வந்தடைகிறது. இதையொட்டி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 6 மணிக்கு விழா நடைபெறுகிறது.

இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செங்கோட்டையன், அப்போலோ குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டி, சி.ஐ.ஐ. (தமிழ்நாடு) தலைவர் ரவிச்சந்திரன், நடிகை சுஹாசினி, கர்நாடக இசை கலைஞர் சுதா ரகுநாதன், நடிகர் விவேக் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்