75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைக்கு வரவில்லை கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பாயுமா?

தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2017-09-08 22:00 GMT
சென்னை,

ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ என்ற அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒரு பிரிவு 7-ந் தேதியில் இருந்து தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. 20 சதவீத அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வேலைக்கு வரவில்லை.

இந்த போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் யார்-யார்? என்பது பற்றி துறைத் தலைவர்களிடம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்னா உத்தரவிட்டார்.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களின் குறைகளை சுட்டிக்காட்டுவதற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்றும், வேறு வழியை தேர்வு செய்யவேண்டும் என்றும் ஐகோர்ட்டு மதுரை கிளை 7-ந் தேதி உத்தரவிட்டது. அதேபோல வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் அறிவிப்பு வெளியிட்டார்.

ஆனாலும் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. அதேசமயம் 7-ந் தேதி வேலைநிறுத்தம் செய்த 20 சதவீதம் பேர், நேற்று 11 சதவீதம் பேராக குறைந்தது. இதுபற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஆசிரியர்கள் சுமார் 36 ஆயிரம் பேரும், அரசு ஊழியர்கள் சுமார் 39 ஆயிரம் பேருமாக மொத்தம் 75 ஆயிரம் பேர் 8-ந் தேதி வேலைக்கு வரவில்லை. இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்கனவே அரசு விதிகள் உள்ளன.

ஐகோர்ட்டும் இந்த விஷயத்தில் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை பாயுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்