அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க மக்களை திரட்டி போராடுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு

மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க மக்களை திரட்டி போராடுவோம் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2017-09-08 21:30 GMT
தஞ்சாவூர்,

தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தஞ்சையில் நேற்று தி.மு.க. பிரமுகர்கள் இல்ல திருமணங்களை நடத்தி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏற்கனவே சேர்ந்து இருந்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பிரிந்து தற்போது சேர்ந்து உள்ளனர். இவர்கள் நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டார்கள். தமிழகத்தில் நிலையாக செயல்படும் ஆட்சி இல்லை. விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று கூறினார்கள். நொடி பொழுதில் கூட ஆட்சி மாற்றம் வர வாய்ப்பு உண்டு.

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் கவர்னரிடம் மனு கொடுத்தோம். கவர்னர் அதற்கு செவிசாய்க்கவில்லை. தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.க்கள் சார்பில் ஜனாதிபதியிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்போம். பின்னர் காலக்கெடு விதிப்போம்.

அதற்குள் பதில் அளிக்கவில்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி சட்டப்படி இந்த (அ.தி.மு.க.) ஆட்சியை கலைக்க போராடும் நிலைக்கு வருவோம். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. கதிராமங்கலம், நெடுவாசலில் போராட்டம் ஓயவில்லை. விவசாயிகள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

கல்வியின் தரம் குறைந்துவிட்டதாகவும், அதை சரி செய்வதற்கு தான் நீட் தேர்வு என்றும் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். நீட் தேர்வினால் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி இதை இப்படியே விட்டால் என்ஜினீயரிங் படிப்பிற்கு நீட் தேர்வு, பிற படிப்புகளுக்கு நீட் தேர்வு என்ற அச்சுறுத்தும் நிலை ஏற்படும்.

தற்போது பினாமி, குதிரைபேர ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி போனால் தான் மக்களுக்கு நிம்மதி கிடைக்கும். இந்தி எதிர்ப்பை போல் நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர்.

இந்த போராட்டம் நியாயமானது என்றும், அது தொடர வேண்டும் என்றும் தி.மு.க. மட்டுமல்ல பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கிறோம். அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருவது மட்டுமின்றி நாங்களும் மாணவர்களுடன் இணைந்து போராடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்