காவலர்களின் மன அழுத்தத்தை போக்க ஏற்பாடு அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக காவல்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள், அனுபவிக்கும் துயரங்கள் ஆகியவை குறித்து வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன.;

Update: 2017-09-07 19:15 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக காவல்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள், அனுபவிக்கும் துயரங்கள் ஆகியவை குறித்து வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன. பணிச்சுமை காரணமாக ஏற்படும் மனஅழுத்தம் தான் காவலர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது.

காவலர்களின் மனஅழுத்தத்தைப் போக்க உளவியல் கலந்தாய்வு, பொழுதுபோக்குகள், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை, அரசு ஊழியர்கள் – காவலர்கள் இடையிலான ஊதிய முரண்பாட்டைக் களைதல், 7 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு, காவலராக பணியில் சேருபவர்கள் ஓய்வுபெறும் போது ஆய்வாளராக பதவி உயர்வு பெறுவதை உறுதி செய்தல், அனைத்து மாவட்டங்களிலும் காவலர் நல அமைப்புகளை ஏற்படுத்துதல், படி உயர்வு, சலுகை விலையில் பொருட்களை வழங்கும் கேண்டீன்களை அனைத்து மாவட்டத் தலைநகரங்களுக்கும் விரிவு படுத்துதல் உள்ளிட்ட காவலர் நலத் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்