நெல்லையில் விபத்து மீட்புப்பணியை பார்வையிட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் வேன் மோதி உயிரிழப்பு
நெல்லை அருகே விபத்து மீட்புப்பணியை பார்வையிட சென்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர் வேன் மோதி உயிரிழந்தார்.
நெல்லை,
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே அதிகாலையில் சாலையோரம் நின்று கொண்டு இருந்த கியாஸ் சிலிண்டர் லாரி மீது தண்ணீர் லாரி மோதியது. இதில் கியாஸ் சிலிண்டர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தாழையூத்து போலீஸ் பெண் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா(30) தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கவிழ்ந்து கிடந்த சிலிண்டர் லாரியை மீட்க பாளையங்கோட்டையில் இருந்து மீட்பு வாகனம் கொண்டு வரப்பட்டது.
வாகனம் மூலம் மீட்பு பணி நடந்து கொண்டு இருந்தது. அதனை சாலை ஓரமாக நின்று சப்-இன்ஸ்பெக்டர் அகிலா கவனித்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக பழங்கள் ஏற்றிக் கொண்டு மதுரையில் இருந்து ஒரு வேன் வேகமாக வந்து கொண்டு இருந்தது.
அந்த வேன் கண்இமைக்கும் நேரத்தில் மீட்பு பணியை பார்த்துக் கொண்டு இருந்த அகிலா மற்றும் அங்கு நின்று கொண்டு இருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அந்த இடத்திலேயே சப்-பென்ஸ்பெக்டர் அகிலா உயிரிழந்தார். 3 பேர் காயம் அடைந்தனர்.
தகவல் கிடைத்ததும் தாழையூத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழங்களை ஏற்றி வந்த வேன் டிரைவர் மாதவனை(50) கைது செய்தனர். பின்னர் பலியான சப்-இன்ஸ்பெக்டர் அகிலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.