சென்னையில் இயற்கை புகைப்பட கண்காட்சி ‘இந்து குழும’ இயக்குனர் என்.ரவி தொடங்கி வைத்தார்

சென்னையில் இயற்கை புகைப்பட கண்காட்சி வருகிற 9-ந்தேதி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியை ‘இந்து குழும’ இயக்குனர் என்.ரவி தொடங்கி வைத்தார்.

Update: 2017-09-06 21:15 GMT
சென்னை,

‘சாப்ட்வேர்’ கம்பெனி அதிபர் ஸ்ரீராம ராஜா, 12-ம் வகுப்பு படிக்கும் அவரது மகன் கேசவ் ராஜா ஆகியோர் இணைந்து ‘இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் இயற்கை காட்சிகள், வனவிலங்குகள், பறவைகளை அழகாக படம் பிடித்துள்ளனர்.

அவர்கள் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆர்ட் ஹவுசில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை ‘இந்து குழும’ இயக்குனர் என்.ரவி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

கண்காட்சியை பார்வையிட்டு ஸ்ரீராம ராஜா, கேசவ் ராஜா ஆகியோரை என்.ரவி மனதார பாராட்டினார்.

ராமேசுவரம் கடலின் சூரிய உதயம், சாந்தமான கடல் அலைகள் உள்பட இயற்கை காட்சிகள் மட்டுமின்றி சென்னை பழவேற்காடு ஏரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளில் பறவைகள் நடமாட்டம், வாத்துகளின் உற்சாக நீச்சல், ஆப்பிரிக்க நாடுகளில் சிறுத்தைகள் குதூகலிப்பு, மான்கள் துள்ளி குதித்து ஓடுதல் போன்ற 48-க்கும் மேற்பட்ட படங்கள் கண்காட்சியை அலங்கரித்துள்ளன. இயற்கையை நம் கண்முன்னே நிறுத்தும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைந்துள்ளது. நேற்று தொடங்கிய கண்காட்சி 9-ந்தேதி வரை நடக்கிறது.

புகைப்பட கண்காட்சி குறித்து ஸ்ரீராம ராஜா கூறியதாவது:-

நானும், எனது மகனும் தொழில்ரீதியான புகைப்பட கலைஞர்கள் கிடையாது. இயற்கை, வனவிலங்குகள் மற்றும் பறவை இனங்கள் மீதான ஈர்ப்பு காரணமாக ஆர்வத்துடன் கடந்த 5 ஆண்டுகளாக புகைப்படங்களை எடுத்து வருகிறோம்.

சென்னையிலும் பழவேற்காடு ஏரி, சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் அதிகம் உள்ளன. நாம் அவற்றை முறையான முறையில் பராமரித்து பாதுகாக்க வேண்டும்.

புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்றுள்ள புகைப்படங்களை யாராவது வாங்க வேண்டும் என்று நினைத்தால், லாப நோக்கமின்றி நாங்கள் விற்பனை செய்யவும் தயாராகவே இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்