அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம்: வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அலைமோதும் வாகன ஓட்டிகள்

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதுகிறது.

Update: 2017-09-06 22:45 GMT
பூந்தமல்லி,

வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் வைத்து இருக்க வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை சமாளிக்க கூடுதல் கவுண்ட்டர்களும் திறக்கப்பட்டு உள்ளன.

வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும்போது அவர்களது அசல் உரிமத்தை கட்டாயமாக வைத்து இருக்க வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு நேற்று முதல் அமல்படுத்தி உள்ளது.

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிவிப்பு வந்த பிறகு அச்சம் காரணமாக வாகன ஓட்டிகள் பழைய ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்கவும், புதிய ஓட்டுனர் உரிமம் பெறவும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் திரண்டு உள்ளனர். வழக்கமாக வரும் கூட்டத்தை விட 2 மடங்கு வாகன ஓட்டிகள் வருகையால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது. சிலர் அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்து ஓட்டுனர் உரிமம் எடுக்க குவிந்துள்ளனர். இதில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறவர்கள் மூலம் உரிமம் பெறுவதற்காக பெரும்பாலானோர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கத்தை விட கூட்டம் அதிகமானதால் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தவர்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டு, உரிமம் தொடர்பாக சேவைகள் அளிக்கப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் அதிகநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சென்னை நகரில் உள்ள பூந்தமல்லி மற்றும் குன்றத்தூர், ஆலந்தூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் எடுக்க பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர்.

இதனால் கூட்டத்தை சமாளிக்க வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் கூடுதலாக சில கவுண்ட்டர்களை திறந்து வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதுகுறித்து பூந்தமல்லி ஆர்.டி.ஓ. நெடுமாறன் கூறுகையில், அசல் ஓட்டுனர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்து இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்ததை அடுத்து பூந்தமல்லி ஆர்.டி.ஓ எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அதிக அளவில் ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கு வருகின்றனர். அவர்களின் தேவையை அறிந்து கூடுதலாக 3 கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இதற்கு முன்பு எல்லாம் காலை தொடங்கி மதியம் 12 மணி வரை மட்டுமே ஓட்டுனர் உரிமம் எடுக்க ஆன்லைனில் பதிவு செய்யப்படும். தற்போது அதிக அளவில் பொதுமக்கள் வருவதால் காலை தொடங்கி மாலை வரை புதிய ஓட்டுனர் உரிமம், புதுப்பித்தல் உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அசல் ஓட்டுனர் உரிமம் தொலைத்தவர்கள் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் சான்று ஏதும் பெறத்தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்து அந்த சான்றை கொண்டு வந்து கொடுத்து தொலைந்த ஓட்டுனர் உரிமத்திற்கு பதிலாக புதிய ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

குன்றத்தூர் ஆர்.டி.ஓ. சுந்தரேசன் கூறுகையில், அரசு அறிவிப்பை தொடர்ந்து அதிக அளவில் பெண்களும், வாலிபர்களும் ஓட்டுனர் உரிமம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். காலை முதல் மாலை வரை ஓட்டுனர் உரிமம் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். முன்பெல்லாம் தினமும் குறைந்த அளவு மக்களே ஓட்டுனர் உரிமம் எடுக்க வருவார்கள். ஆனால் தற்போது அதிக அளவில் வருகின்றனர். அவர்களுக்கு உரிய தேவைகள் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக கொளத்தூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று காலை முதலே கூட்டம் அலைமோதியது. சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர். வட்டார போக்குவரத்து அதிகாரி சம்பத்குமார் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் அலுவலர்கள் வாகன ஓட்டிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பெரும்பாலானோர் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்காதவர்களும் தான் அதிக அளவில் வாகனங்களை ஓட்டி வந்து உள்ளனர். தமிழக அரசின் இந்த உத்தரவினால் அவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்றார்.

தமிழ்நாட்டில் உள்ள 12 மண்டல அலுவலகங்களை உள்ளடக்கிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இதே நிலை தான் உள்ளது.

சுமார் 10-க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி, கடந்த மாதத்தில் (ஆகஸ்டு) தமிழகத்தில் புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற 82 ஆயிரம் பேரும், ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க 97 ஆயிரம் பேரும், ஓட்டுனர் உரிமம் நகல் பெற 3 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

போலீசாரின் கெடுபிடி அதிகரிக்கும் போது ஓட்டுனர் உரிமம் புதிதாக பெறுபவர்களின் எண்ணிக்கையும், ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் இந்த மாதத்தில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அசல் ஓட்டுனர் உரிமம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதற்கு பிறகு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதுகிறது. அறிவிப்பு வந்த மறுநாளே கூட்டம் அதிகரித்தது.

சாதாரண நாட்களை விட வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை தற்போது 2 மடங்கு அதிகரித்துள்ளது. பெரும்பாலும், புதுப்பிக்க வருபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாகி இருக்கிறது. இன்னும் வரக்கூடிய வாரங்களிலும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் சிரமம் இல்லாமல் வந்து விண்ணப்பிக்க கூடுதல் கவுண்ட்டர்கள் சில அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்