‘பெப்சி’ தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: நாளை பேச்சு வார்த்தை

‘பெப்சி’ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் 3-வது நாளாக ரத்து செய்யப்பட்டன. நாளை சமரச பேச்சுவார்த்தை நடக்கிறது.

Update: 2017-09-04 00:00 GMT
சென்னை

மோதல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் (பெப்சி) இடையே மோதல் நீடித்து வருகிறது. பெப்சிக்கு எதிராக திரைப்பட பணிகளுக்கு புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 1-ந்தேதி முதல் காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பெப்சி தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதனால் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ரஜினிகாந்த் நடித்து வரும் காலா, விஜய்யின் மெர்சல், சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் உள்பட முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

40 படப்பிடிப்புகள் ரத்து

40 சினிமா படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக ‘பெப்சி’ தரப்பில் கூறப்பட்டது. பெப்சி வேலை நிறுத்தம் தொடர்வதால் நேற்று 3-வது நாளாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் முன்னணி நடிகர்-நடிகைகள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கம் புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுப்பதை கண்டித்து சென்னையில் நாளை (5-ந்தேதி) ‘பெப்சி’ தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

வள்ளுவர் கோட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் கேமராமேன்கள், ஸ்டண்ட் நடிகர்கள், லைட்மேன்கள், மேக்கப்மேன்கள், எடிட்டர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பு மேற்பார்வையாளர்கள், நடன இயக்குனர்கள் உள்பட 23 சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சமரச பேச்சுவார்த்தை

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் பெப்சிக்கும் இடையே சென்னையில் நாளை(செவ்வாய்க்கிழமை) சமரச பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நலத்துறை ஏற்பாடு செய்து உள்ளது. தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும் பெப்சி நிர்வாகிகளும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து முறையிடவும் பெப்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்