அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.;

Update: 2017-09-04 00:00 GMT
இதில், கலந்துகொள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு தொலைபேசி மூலம் அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக, கடந்த மாதம் 28-ந் தேதி அக்கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பெரும்பாலான எம்.எல்.ஏ.க் கள் கலந்துகொள்ளவில்லை.

இதனால், அந்த கூட்டத்தில், பொதுக்குழு கூட்டம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், அன்று மாலையே இம்மாதம் 12-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், கடந்த மாதம் 31-ந் தேதி சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்திற்கு மாவட்ட வாரியாக அமைச்சர்களையும், எம்.எல். ஏ.க்களையும் அழைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தொடர்ந்து, 2 நாட்கள் எம்.எல்.ஏ.க்களை அவர் சந்தித்தார்.

அவசர அழைப்பு

இந்த நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு தொலைப்பேசி மூலம் அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள் கலந்துகொள்கின்றனர். வரும் 12-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடவுள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவதால், கூட்டத்தில் அதுபற்றியே விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

எதற்காக கூட்டம்?

கடந்த மாதம் 28-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அதன் பிறகு எம்.எல்.ஏ.க்களை தனது வீட்டிற்கே அழைத்து பேசி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமரசம் செய்ததால், நாளைய கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

இந்த கூட்டத்தில், பொதுக்குழுவில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்களுக்கும் அது தொடர்பான உத்தரவுகள் இடப்படும் என்றும் தெரிகிறது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்ததும், மதியம் 12 மணி அளவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டமும், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டமும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்