மாணவி அனிதா உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உடலுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.;

Update: 2017-09-03 00:15 GMT
செந்துறை

தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உடலுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

பொதுமக்கள் அஞ்சலி

‘மருத்துவ படிப்பு கனவு நிறைவேறாமல் போனதால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை குழுமூரில் உள்ளஅவரது வீட்டின் அருகே உள்ள சமுதாயக்கூட காலி இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டு அனிதாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அனிதாவின் தந்தை சண்முகம் மற்றும் அவருடைய சகோதரர்கள் அனிதாவின் உடல் அருகே கதறி அழுதபடி உட்கார்ந்து இருந்தனர். செந்துறை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து வந்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அனிதாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் கட்சியினர்

மாணவி அனிதா குன்னம் அருகே உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்திருந்தார். அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் சட்டையில் கருப்பு பட்டை அணிந்தபடி வந்து அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேபோல் அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோரும் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்

இயக்குனர் கவுதமன் ஆர்ப்பாட்டம்

திரைப்பட இயக்குனர்கள் பா.ரஞ்சித், களஞ்சியம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட சினிமா துறையை சேர்ந்தவர்கள் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அங்கு தனது நண்பர்களுடன் வந்த திரைப்பட இயக்குனர் கவுதமன் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை அனிதாவின் உடலை எடுக்க விடமாட்டோம் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

டி.டி.வி. தினகரனுக்கு எதிர்ப்பு

அ.தி.மு.க.(அம்மா) அணியை சேர்ந்த டி.டி.வி. தினகரன் நேற்று காலை அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். சில இளைஞர்கள் அவர் அஞ்சலி செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தினகரனுடன் வந்த ஆதரவாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இளைஞர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து தினகரன் அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட்டு சென்றார்.

மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று இரவு 10 மணியளவில் குழுமூர் சென்றார்.

பின்பு மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மாணவியின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அடக்கம் செய்ய கூடாது...

இந்தநிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் அனிதாவின் உடல் வைக்கப்பட்டு இருந்த இடத்தின் அருகே உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அனிதாவின் உடலை அடக்கம் செய்யக்கூடாது எனக்கூறி அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அவர் கள் கீழே இறங்கி வந்தனர். பின்னர் கீழே நின்று அவர்களும். அப்பகுதி மக்களும் இரவு நீண்ட நேரம் வரையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்