தமிழகத்தில் மூடப்பட்ட 1,000 மதுக்கடைகள் மீண்டும் திறப்பு
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் திருத்தம் செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தில் மூடப்பட்ட 1,000 மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் திருத்தம் செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தில் மூடப்பட்ட 1,000 மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுக்கடைகள் மூடல்
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ந் தேதிக்குள் மூடுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் 2,800 மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் 1,183 மதுக்கடைகள் வேறு இடத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டன.
இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் சில திருத்தங்களை அறிவித்தது. அதில், நகரங்களுக்கு இடையே இருக்கும் நெடுஞ்சாலையோரங்களில் உள்ள மதுக்கடைகளை மூடச்சொல்லவில்லை என்றும், 20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ள நெடுஞ்சாலைகளை பொறுத்தவரை, அவற்றில் இருந்து 220 மீட்டர் தொலைவில் இருக்கும் மதுக்கடைகளை மூடினாலே போதுமானது என்றும் குறிப்பிட்டுள்ளது.
மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி
இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் மூடிய கடைகளை உடனடியாக திறக்க டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடியே கிடந்த சில மதுக்கடைகள் நேற்று மாலையில் திடீரென மீண்டும் திறக்கப்பட்டன. இது மதுப்பிரியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயத்தில் மதுவிலக்குக்கோரி போராடி வருபவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து ஏற்கனவே மூடப்பட்ட மதுக்கடைகள், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு உட்பட்டு மீண்டும் படிப்படியாக திறக்கப்பட உள்ளன. இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையில் டாஸ்மாக் நிறுவனம் இறங்கியுள்ளது.
தீர்ப்பில் திருத்தம்
இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி.) பொதுச்செயலாளர் டி.தனசேகரன் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்து, நகரங்களுக்கு இடையே உள்ள மதுக்கடைகளை மூடச்சொல்லவில்லை என்று அறிவித்துள்ளது. இந்த திருத்தத்தின் விளைவாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலையோரங்களில் அமைந்துள்ள மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
அந்த கடைகளில் பணியாற்றிய மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் அந்தந்த மாவட்ட மேலாளரை அணுகி, உரிய உத்தரவினை பெறவேண்டும். மேலும் அந்த கடைகளுக்கு தேவையான மதுபானங்களை கிடங்குகளில் இருந்து, ஏற்றி கடைகளுக்கு கொண்டு சென்று நேற்று மாலை 5 மணி முதல் விற்பனையில் ஈடுபட்டனர்.
1,000 கடைகள் மீண்டும் திறப்பு
தமிழகம் முழுவதும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மூடப்பட்ட மதுக்கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. ஏற்கனவே 1,103 மதுக்கடைகள் இடமாற்றம் செய்து விற்பனை நடந்து வருகிறது. அதில் பெரும்பாலான கடைகள் ஆள் நடமாட்டம் இல்லாத ஏரிக்கரை, சுடுகாடுகளுக்கு அருகேயும், புதர் மண்டிய பகுதிகளிலும் இயங்கி வருகிறது.
இந்த கடைகளுக்கும், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இதனால் ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. மேலும் கடைகளில் விற்பனையாகும் பணமும் கொள்ளைபோகிறது. ஆகவே தமிழக அரசு பாதுகாப்பற்ற மதுக்கடைகளை நகர பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யவேண்டும்.