மாணவி அனிதா தற்கொலை; சாலைமறியல் பிரதமர் மோடியின் உருவபொம்மை எரிப்பு
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
அரியலூர்
கலெக்டர் ஆறுதல்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனித்தெருவை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வால் மருத்துவப்படிப்பு கனவு நிறைவேறாத வேதனையில் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா மற்றும் போலீஸ் அதிகாரிகள் அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனிதாவின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவரது உறவினர்கள், உடலை எடுக்கவிடாமல் தடுத்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உறவினர்கள் வலியுறுத்தல்
நீட் தேர்வால் தன்னால் டாக்டராக முடியாது என்ற மனவேதனையில் தான் அனிதா இறந்தார். இதுபோன்ற சம்பவம் வேறு யாருக்கும் நிகழாமல் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனிதாவின் உறவினர்கள் வலியுறுத்தினர்.
அப்போது இதுபற்றி அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என கலெக்டர் லட்சுமிபிரியா தெரிவித்தார். அதன் பின்னர் உறவினர்கள் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், குழுமூர் கிராம மக்களுடன் சேர்ந்து குழுமூர்-செந்துறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
உருவபொம்மை எரிப்பு
அப்போது நீட் தேர்வை கண்டித்தும், இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷமிட்டனர். மேலும் பிளஸ்-2 தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அப்போது பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செந்துறை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.