‘அனிதா மரணம் செய்தி மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி இருக்கிறது’ சுகாதாரத்துறை அமைச்சர்-செயலாளர் பேட்டி
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த மனவேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவருடைய இழப்பு ஆற்றொனா துயரத்தை கொடுத்து இருக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
‘அனிதா மரணம் செய்தி மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி இருக்கிறது’
சுகாதாரத்துறை அமைச்சர்-செயலாளர் பேட்டி
சென்னை
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மாணவி அனிதா மரணம் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த மனவேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவருடைய இழப்பு ஆற்றொனா துயரத்தை கொடுத்து இருக்கிறது. அனைத்து மாநிலங்களும் கைவிட்ட நிலையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்காக கடுமையாக ஒற்றை மாநிலமாக நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு டெல்லியில் முகாமிட்டு போராடினோம்.
சுப்ரீம் கோர்ட்டு வக்கீல், சட்ட அமைச்சகம் உள்பட 3 அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்றோம். இருப்பினும் நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் எதிர்பாராத தீர்ப்பு வந்தது. அதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மூத்த வக்கீல் மூலம் வாதாடினோம். இந்த சட்ட போராட்டத்தில் துணை நின்ற மாணவி தான் இந்த அனிதா.
அந்த மாணவியின் மரண செய்தி எனக்கு பெரிய வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. நான் மிக பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். பிற மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் மனவலிமை பெற வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘மாணவி அனிதா தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மிகவும் துயரமானது. எந்த சூழ்நிலையிலும், எக்காரணத்தை கொண்டும் மாணவ கண்மணிகள் தற்கொலை முடிவை எடுக்கக்கூடாது என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.