சொத்துவரியை உயர்த்துவது எப்போது?சென்னை மாநகராட்சி ஆணையர் பதில் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

சொத்து வரியை உயர்த்துவது எப்போது? என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2017-08-18 21:45 GMT
சென்னை,

சொத்து வரியை உயர்த்துவது எப்போது? என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையரும், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளரும் வருகிற 21-ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் சிலர், தங்களது கடைக்கு சொத்து வரி கேட்டு மாநகராட்சி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘தமிழகம் முழுவதும் சொத்து வரியை 1998-ம் ஆண்டுக்கு பின்னர் உயர்த்தப்படவில்லை. ஆட்சிக்கு மாறி மாறி வந்த அ.தி.மு.க.வும், தி.மு.க. வும், மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்த வேண்டிய சொத்து வரியை, பல ஆண்டுகளாக உயர்த் தாமல் இருந்துள்ளனர். இதனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு தொகையை, இந்த இரு கட்சிகளிடம் இருந்து ஏன் வசூலிக்கக் கூடாது?’ என்று கேள்வி எழுப்பினார்.

இதன்பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப் பதாவது:-

சொத்து வரியை ஏன் உயர்த்தவில்லை? என்ற கேள்விக்கு, மாநகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல் பி.வி.செல்வகுமார், சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு மாநகராட்சியில் தீர்மானம் இயற்றப்பட்டது என்று பதிலளித்தார். ஆனால், மாநகராட்சி மேயராகவும், கவுன்சிலராகவும் இருந்த அரசியல்வாதிகள், அரசியல் காரணத்துக்காக இந்த சொத்துவரியை உயர்த்தவே இல்லை. 2002, 2006, 2010, 2014-ம் ஆண்டுகளில் சொத்து வரியை சட்டப்படி உயர்த்தியிருந்தால், சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மாநகராட்சிக்கு வருவாயாக கிடைத்து இருக்கும். சொத்து வரி உயர்த்தாததால், மாநகராட்சிக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. அதனால் சொத்து வரியை உயர்த்த முடியாது. தேர்தல் நடந்து முடிந்து, மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பு ஏற்ற பின்னரே, வரியை உயர்த்த முடியும் என்று காரணம் கூறி மாநகராட்சி ஆணையர் அமைதியாக இருந்துவிட முடியாது. தற்போது உள்ள சூழ்நிலையில், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும்? என்று யாருக்கும் தெரியாது. மேலும், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாதபோது, அந்த அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அதிகாரிக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. எனவே, அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, சொத்துவரியை உயர்த்த சென்னை மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, சொத்துவரியை உயர்த்துவது எப்போது? என்பது குறித்து இந்த ஐகோர்ட்டுக்கு சென்னை மாநகராட்சி ஆணையரும், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளரும் வருகிற 21-ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், அந்த 2 அதிகாரிகளையும் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப வேண்டியது வரும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்