ஜெயலலிதா இல்லத்தை இழப்பீடு கொடுத்து நினைவில்லமாக்குவோம் அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

ஜெயலலிதா இல்லத்தை இழப்பீடு கொடுத்து நினைவிடமாக்குவோம் என அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2017-08-18 06:18 GMT
சென்னை

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லம்  ஆக்கப்படுவதற்கு  தீபாவும், தீபக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாரிசுகளான எங்களிடம் எந்தவிதமான கருத்தையும் கேட்காமல் எப்படி இது போன்ற ஒரு அறிவிப்பை வெளியிடலாம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக், முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:

மறைந்த முதல்-அமைச்சரும் எங்களது அத்தையுமான ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக்கப்போவதாக அறிவித்துள்ளீர்கள். இதில் எங்களுக்கு எந்தவித பயனும் இல்லை. ஆனால் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லம் இருக்கும் இடம் ஜெயலலிதாவின் தாயாரும் எங்களது பாட்டியுமான சந்தியா வாங்கிய சொத்தாகும். அதற்கு இப்போது நானும் எனது சகோதரி தீபாவும் மட்டுமே உண்மையான வாரிசுதாரர் களாக உள்ளோம்.

அவர் வசித்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் முன்னர், அந்த சொத்தின் வாரிசுகள் என்ற அடிப்படையில் எங்கள் இருவரிடமும் சட்டப்படி கேட்டிருக்க வேண்டும். அப்படி கேட்காதது தவறாகும்.

போயஸ் கார்டன் வீடு தனது காலத்துக்கு பிறகு யாருக்கு சொந்தம் என்பது பற்றி பாட்டி சந்தியா உயில் எழுதி வைத்துள்ளார். அதில் எனக்கும் எனது சகோதரி தீபாவுக்குமே போயஸ் கார்டன் வீடு சொந்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் போயஸ் கார்டன் இல்லத்தை யாருடைய பெயருக்கும் ஜெயலலிதா எழுதி வைக்க வில்லை. எனவே  இந்து சொத்துரிமை சட்டப்படியும் அந்த உயிலில் குறிப்பிட்டுள்ள படியும் நாங்கள் இருவர் மட்டுமே ஜெயலலிதாவின் வாரிசுகள் என்பது உறுதியாகும்.

எனவே, போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக்கும் அடுத்த கட்ட  நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர், என்னிடமும், எனது சகோதரி தீபாவிடமும் கலந்து ஆலோசித்து சட்டப்பூர்வ அனுமதியை பெற வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தீபக் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து  சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் நிருபர்கள் கேட்டதற்கு ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடமாக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அந்த வீட்டுக்கு வாரிசுதாரர், உரிமையாளர் யார் என்பதை சட்டப்படி அறிந்து அவர்களுக்கு இழப்பீடு தொகையை கொடுத்து வீட்டை நினைவிடம் ஆக்க அரசு நடவடிக்கை மேறகொள்ளும்.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்