வேட்பாளர்களின் உடல் ஆரோக்கியத்தை வாக்காளர்களுக்கு தெரிவிக்க கோரிய வழக்கு

தேர்தலில் போட்டியிடும் நபர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை, வாக்காளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட்டு தள்ளி வைத்துள்ளது.

Update: 2017-08-16 22:45 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், பொள்ளாச்சியை சேர்ந்த சுப்பையா என்பவர் தாக்கல் செய்த மனுவில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள், வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, அவர்களது உடல் நிலை பற்றிய அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்தால் அவர்களில் சிறந்தவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்ய முடியும். மேலும், தேவையற்ற இடைத்தேர்தல்களை தவிர்க்கவும் முடியும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து வருகிறார். ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்திய ஜனாதிபதி முதல் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் வரையிலான பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள், வேட்புமனுவுடன் உடல்நிலை தகுதி சான்றிதழை ஏன் சமர்பிக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அப்போது, உடல் தகுதி சான்றிதழை வேட்புமனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் விதிகள் எதுவும் இல்லை என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன், ‘ஒருவரது உடல் ஆரோக்கியம் என்பது தனிப்பட்ட வி‌ஷமாகும். அந்த விவரங்களை வேட்புமனுவுடன் தாக்கல் செய்வது குறித்து மத்திய அரசு தான் முடிவு எடுக்கவேண்டும்’ என்றார்.

அதற்கு நீதிபதி, ‘அரசு அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் உடல் தகுதி சரி பார்க்கப்படும்போது, நாட்டை ஆளப்போகும் நபர்களின் ஆரோக்கியத்தை வாக்களிக்கும் மக்கள் தெரிந்து கொள்ளக்கூடாதா? பொது வாழ்க்கைக்கு வந்த பின்னர், உடல் ஆரோக்கியம் எப்படி தனிப்பட்ட வி‌ஷயமாகும்?’ என்று கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்