திருவண்ணாமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது

சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், திருவண்ணாமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருதை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Update: 2017-08-15 22:45 GMT

சென்னை,

சென்னை கோட்டையில் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு விருதுகளை உரியவர்களுக்கு வழங்கினார்.

டாக்டர் அப்துல் கலாம் விருது, சென்னை, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக பேராசிரியர் ச.ப.தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது, ரூ.5 லட்சம் தொகை, 8 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து திருவண்ணாமலையை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள் சீ.பிரித்தி பெற்றுக்கொண்டார். இந்த விருது ரூ.5 லட்சம் தொகை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இவர் மாற்றுத்திறனாளி ஆவார்.

சென்னை மருத்துவகல்லூரி– கல்லீரல் நோய்தடுப்பு சிகிச்சை பிரிவு, துறைத்தலைவர் டாக்டர் கே.நாராயணசாமி மற்றும் மரங்களை வளர்ப்பதில் தண்ணீரை பாய்ச்சும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் டாக்டர் கொ.சத்யகோபால் ஆகியோரின் பணியை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவைபுரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகளையும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதன்படி சிறந்த டாக்டருக்கான விருது காஞ்சீபுரம் கண் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் வீ.ம.சங்கரன், சிறந்த சமூக பணியாளருக்கான விருது மதுரை, கியூர் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மைய நிறுவனர் வெ.பெ.இளையபாரி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

அப்துல்கலாம் விருது பெற்ற பேராசிரியர் ச.ப.தியாகராஜன் கூறியதாவது:–

உயர்கல்வித்துறையில் கடந்த 50 ஆண்டுகள் பணியாற்றியதன் அடிப்படையில் தேசிய அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி வல்லுனராகவும், விஞ்ஞானியாகவும் இருந்து வருகிறேன். 345 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், 20 நூல்களையும் வெளியிட்டுள்ளேன். அத்துடன் 8 கண்டுபிடிப்புகளுக்காக காப்புரிமைகளையும் பெற்றுள்ளேன். அத்துடன் மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கவல்ல ‘வைரோஹெப்’ என்ற மருந்தினை இந்திய மருத்துவத் தாவரத்திலிருந்து கண்டுபிடித்து அதற்காக காப்புரிமையும் பெற்றுள்ளேன். இத்தாலிய அரசின் செவாலியே விருதும் கிடைத்துள்ளது.

இந்தியாவிலேயே கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கும் மாநிலம் தமிழகம் தான். இதன் மூலம் சிறந்தகல்வி அறிவை அனைவரும் பெரும் வாய்ப்பை பெற முடியும், மேலும் சீர்திருத்த திட்டமும் கொண்டுவரப்பட உள்ளது. இதில் அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்களையும் இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பாடதிட்டத்தை உருவாக்குவதற்கு முன்பாக சிறந்த ஆசிரியர்களையும் வளர்க்க வேண்டும்.

இதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதுடன், தமிழகமும் முன்னேற வாய்ப்பு உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்த எனக்கு, அவருடைய பெயரிலான விருது பெருவதை பெருமையாக கருதுகிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

கல்பனா சாவ்லா விருது பெற்ற சீ.பிரித்தி கூறியதாவது:–

கடந்த 1997–ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட மட்டை பந்து அணிக்கான சாம்பியன் போட்டிக்கு தமிழக அணியை என்னுடைய 17 வயதில் தலைமையேற்று வழிநடத்தி சென்று வெற்றியும் பெற்றேன். அதற்கு பிறகு ஏற்பட்ட விபத்தில் சிக்கியதால் உடல் உறுப்புகள் முற்றிலுமாக செயல் இழந்து சக்கர நாற்காலியை சார்ந்து என்னுடைய வாழ்க்கை அமைந்துள்ளது. இருந்தாலும் சோர்வடையாமல் உற்சாகத்துடன் செயல்பட்டு விபத்துகளில் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக ‘சோல் பிரி’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். இந்த அறக்கட்டளை மூலம் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, கல்வி, சுயதொழில் ஆகியவற்றை வழங்குவதன் மூலமாக பலருடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளேன்.

அனைவருக்கும் சமஉரிமை கிடைக்க வேண்டும். எனது உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் இருந்ததையும் பொருட்படுத்தாமல் உறுதியுடன் மீண்டுவந்து சிறந்த சாதனை படைத்து வருகிறேன். இதற்காக தமிழக அரசு எனக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்துள்ளது. அதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்