தினகரனுக்கு கூடிய கூட்டம் செல்வாக்கிற்கான கூட்டம் அல்ல. செல்வத்திற்கான கூட்டம் - ஒபிஎஸ் அணி எம்.எல்.ஏ

தினகரனை சந்தித்ததாக கூறப்பட்ட ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ சந்திக்கவில்லை என மறுப்பு தெரிவித்து உள்ளார்.;

Update: 2017-08-15 06:55 GMT
மதுரை

அ.தி.மு.க. ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் இரு பிரிவாக செயல்பட்டு வந்தது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி  அணியில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தனியாக செயல்படத் தொடங்கினார்கள். என்றாலும்  எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தினார். அ.தி.மு.க.வில் உள் கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள  நிலையில் தினகரன் தன் பலத்தை எடுத்துக்காட்டவே இந்த கூட்டத்தை கூட்டினார்.

இதில் தொண்டர்கள் திரளாக  கூடியதுடன் 20 எம்.எல்.ஏ.க்களும் 7 எம்.பி.க்களும் கலந்து கொண்டது  திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் ஆதரவாளர் ஒருவர் கூறும் போது, தினகரன் தனது பலத்தை நிரூபித்து விட்டார். அவர்  தலைமையின் கீழ்தான் உண்மையான அ.தி.மு.க. செயல்படுகிறது. நேற்றைய கூட்டத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.

இதற்கிடையே அ.தி. மு.க. கூட்டணி கட்சி எம்.எல். ஏ.க்களான  தமிமுன் அன்சாரி, (மனித நேய ஜனநாயக கட்சி), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை) ஆகியோரும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்  தினகரனுடன் தனது குடும்பத்துடன் இன்று  சாமி கும்பிட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சென்றார். அப்போது  ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த  சோழ வந்தான் தொகுதி எம்.எல். ஏ  மானிக்கமும் சாமி கும்பிட சென்று உள்ளார். அப்போது இருவரும் சந்தித்து கொண்டதாக கூறப்பட்டது. ஓ.பன்னீர் செல்வத்திற்கு முதன் முதலில் ஆதரவு தெரிவித்தவர் மாணிக்கம் எம்.எல்.ஏ என்பது குறிப்பிட தக்கது.

ஆனால் தினகரனை தான் சந்திக்க வில்லை என மாணிக்கம் எம்.எல்.ஏ கூறி உள்ளார்.

சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம் கூறியதாவது:-

சாமி தரிசனம் செய்யவே மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தேன். நான் தினகரனை சந்திக்கவில்லை. தினகரனை சந்தித்தேன் என்பது தவறு. அப்படி ஒரு சந்திப்பு என் வாழ்நாளில் நடக்காது. மேலூரில் கூட்டம் கூடுவதி வைத்து யாரரையும் எடை  போட்டு விட முடியாது. தினகரனுக்கு கூடிய கூட்டம் செல்வாக்கிற்கான கூட்டம் அல்ல. செல்வத்திற்கான கூட்டம் அது. நாங்கள் திருந்த வேண்டிய அவசியமில்லை; யார் திருந்த வேண்டுமோ அவர்கள் திருந்திக்கொள்ளுங்கள் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்