பண்டைய மன்னர்களால் கட்டப்பட்ட 100–க்கும் மேற்பட்ட கோவில்கள், கூவம் நதிக்கரையோரம் அமைந்துள்ளன

பண்டைய மன்னர்களால் கட்டப்பட்ட 100–க்கும் மேற்பட்ட கோவில்கள் கூவம் நதிக்கரையோரம் அமைந்துள்ளதாக தமிழக அரசின் தொல்லியல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2017-08-14 22:15 GMT

சென்னை,

தமிழக அரசின் தொல்லியல் துறை, அருங்காட்சியகங்கள் துறை மற்றும் சென்னை 2000 பிளஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக கலையரங்கத்தில் ‘சென்னை மாத விழா’ என்ற பெயரில் தொல்லியல் தொடர்பான சொற்பொழிவுகள், சென்னை பெருநகரத்தை ஒட்டிய வாழ்க்கை முறை, கலை, இலக்கியம், இசை, பண்பாடு, கல்விமுறை, ஆட்சிமுறை போன்ற அனைத்தையும் பற்றி விரிவாக பேசப்பட்டு வருகிறது.

நேற்று காலையில் கூவம் நதியின் தொல்லியல் குறித்து சரித்திர ஆய்வாளர் பத்மபிரியா புகைப்பட விளக்கங்களுடன் தொடர் சொற்பொழிவாற்றினார். சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள திருவொற்றியூரின் பெருமை குறித்து சென்னை 2000 பிளஸ் அறக்கட்டளையின் தலைவர் ஆர்.ரங்கராஜ் விளக்கவுரையாற்றினார். சிம்மம் குமார் என்பவர் திருவொற்றியூரின் பெருமைகள் குறித்த தேவார பாடல்கள் மற்றும் பட்டினத்தார், அருணகிரிநாதர் எழுதிய பாடல்களையும் பாடினார். மாலையில் திருநின்றவூரின் பெருமைகள் குறித்து பத்திரிகையாசிரியர் வி.ரங்காச்சாரி சொற்பொழிவாற்றினார்.

அதை தொடர்ந்து திருக்குறளை கர்நாடக ராகத்தில் பாடி இசை வெளியீடு செய்துள்ள பத்மாசினி என்பவர் திருக்குறளை கர்நாடக இசையில் பாடினார். அதே போன்று திருக்குறளை 34 மொழிகளில் பாடும் திறமை பெற்றுள்ள பத்மாசினியின் மகன் அபினவ் ஸ்ரீதரன் நேற்று பிரெஞ்சு, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பானிஷ் உள்பட 7 மொழிகளில் திருக்குறளை பாடினார்.

கூவம் நதியின் தொல்லியல் குறித்து பத்மபிரியா பேசியதாவது:–

திருவள்ளூர் மாவட்டம் கேசாவரம் என்னும் இடத்தில் தொடங்கி சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சென்னை நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கும் கூவம் ஆற்றின் கரையோரத்தில் தான் தெற்கு ஆசியாவின் முதல் கண் மருத்துவமனை, பெண்கள் மருத்துவம் படிப்பதற்கு முதன் முதலில் அனுமதி அளித்த மெட்ராஸ் மருத்துவ கல்லூரி உள்பட பல்வேறு பாரம்பரிய கட்டிடங்கள் அமைந்துள்ளன.

கூவம் நதியில் தூயநீர் ஓடியதால் தான் பண்டைய கால மன்னர்களான பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் மற்றும் விஜயநகர கோபால வர்மன் உள்பட பெரும்பாலான மன்னர்கள் கூவம் நதிக்கரையில் ஏராளமான கோவில்களை கட்டி உள்ளனர். இதனால் 70 கிலோ மீட்டர் தூரம் உள்ள கூவம் நதிக்கரையில் சுமார் 114 கோவில்கள் அமைந்துள்ளன.

இப்படி தூயநீர் ஓடிய காலங்களில் பல்வேறு சிறப்புகளை கொண்டிருந்த கூவம் நதி தற்போது சாக்கடையாக மாறி உள்ளது. இந்த நிலை மாற வேண்டுமானால் கூவம் நதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். இது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கும், அரசுக்கும் ஏற்பட்டால் மட்டுமே கூவம் நதியை தூய்மை படுத்த முடியும்.  இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்