நீட் தேர்வு: தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்களிக்க கோரும் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று வக்கீல் நளினி சிதம்பரம் தெரிவித்தார்.

Update: 2017-08-14 22:45 GMT

சென்னை,

‘நீட்’ தேர்வு நடத்தப்படவேண்டும், விலக்களிக்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மருத்துவக்கல்வி இயக்ககத்தை முற்றுகையிட்டு நேற்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், ‘நீட்’ தேர்வு வேண்டும், பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை வேண்டாம் என்று கோ‌ஷங்களையும் எழுப்பினர். ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய இந்த போராட்டத்தில் ‘நீட்’ தேர்வு தர வரிசை பட்டியலை வெளியிடவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் கேட்டுக்கொண்டதின் பேரில், மாணவர்கள்–பெற்றோர் என 10 பிரதிநிதிகள் மருத்துவக்கல்வி இயக்கக அதிகாரிகளிடம் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர். தொலைபேசி வாயிலாக மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின் ஜோவிடமும் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் ஷ்ரேயா, தன்யா, மாணவர் மோனிஷ் ஆகியோர் கூறுகையில், ‘‘நீட் தேர்வுக்கு விலக்களித்தால், எங்களால் எம்.பி.பி.எஸ். படிக்க முடியாது. எங்களது பயிற்சியும், முயற்சியும் வீணாகிவிடும். எனவே நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்’’ என்றனர்.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள வக்கீல் நளினி சிதம்பரத்தை நேரில் சந்தித்தனர்.

இதுகுறித்து வக்கீல் நளினி சிதம்பரம் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–


‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்க அவசர சட்டம் கொண்டு வந்தது, இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் நடத்தப்பட்ட மோசடி ஆகும். கடைசி நிமிடத்தில் இதுபோன்ற சட்டம் இயற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தும் இந்த சட்டம் இயற்றப்பட்டது என்றால், இது கண்துடைப்பு போன்ற நிகழ்வாகும்.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம். ‘நீட்’ தேர்வு என்பது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு. அதற்கு விலக்களித்தால் அத்தேர்வு எழுதி காத்திருக்கும் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய எல்லா ஆவணங்களும் தயாராகவே வைத்துள்ளேன். எனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று உறுதியாக கூறுகிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்