மதுரை கூடல்நகரில் 2 டாஸ்மாக் கடைகள் சூறையாடப்பட்டன 9 பெண்கள் கைது

மதுரை கூடல்நகரில் அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகளை பெண்கள் அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக 9 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2017-08-12 21:00 GMT
மதுரை, 

மதுரை கூடல்நகர் பகுதியில் 6-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த கடைகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். ஆனால் கடைகள் மூடப்படவில்லை.

இந்நிலையில் கூடல்நகர் அஞ்சல்நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அங்கு பணிபுரியும் விற்பனையாளர்கள் மாரிச்சாமி, மாரிமுத்து ஆகியோர் நேற்று காலை திறந்தனர். அப்போது அங்கு வந்த பெண்கள், கடை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து கம்பு மற்றும் கற்களுடன் கடைக்குள் புகுந்த அவர்கள் விற்பனையாளர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கி விட்டு கடையை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த மதுபாட்டில்களை எடுத்து கொண்டு வந்து சாலையில் போட்டு உடைத்தனர்.

இதற்கிடையே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் அதன் அருகில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடையை நோக்கி சென்றனர். அங்கு தண்ணீர் பாட்டில், கண்ணாடி பெட்டி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும் அதன் அருகில் இருந்த பாரில் மேஜை, நாற்காலி உள்ளிட்டவைகளையும் அடித்து நொறுக்கினர். அடுத்தடுத்து இருந்த 2 டாஸ்மாக் கடைகளிலும் பொருட்கள் அடித்து நொறுக் கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடல்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் மரியதங்கம்(வயது 40) உள்ளிட்ட 9 பெண்களை போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்