‘‘இரட்டையர்கள் இணைந்தால் இரட்டை இலை கிடைக்கும்’’ டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

‘‘இரட்டையர்கள் இணைந்தால் இரட்டை இலை கிடைக்கும்’’ என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2017-08-12 21:45 GMT
சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் தியாகராயநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தென்னிந்தியாவை சேர்ந்த வேட்டி கட்டிய தலைவர், நாட்டின் துணை ஜனாதிபதி ஆகியுள்ளார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் என முக்கிய பொறுப்புகளில் பா.ஜ.க. தலைவர்கள் அங்கம் வகிப்பது சரித்திர சாதனை ஆகும்.

‘காங்கிரசுக்கு மாற்றே இல்லை’ எனும் நிலைமையை மாற்றி, தற்போது ‘காங்கிரசே இல்லாத பாரதம்’ எனும் முயற்சியில் முழுமை அடைந்து வருகிறோம். தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்றும். கோட்டையில் கொடியும் நடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– அ.தி.மு.க. 2 அணிகள் இணைப்பு விவகாரத்தின் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக கூறப்படுகிறது?

பதில்:– அணிகள் இணைப்பு என்பது அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சினை. இதில் பா.ஜ.க. பின்னணி இல்லை. மக்களின் நலனுக்காக, 2 அணிகளும் இணைந்தால் நல்லது தானே?

கேள்வி:– இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதில் பா.ஜ.க. முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறதே?

பதில்:– ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க. இயக்கவில்லை. அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சினை தீர்ந்தால் சின்னம் கிடைக்கும், இல்லையென்றால் கிடைக்காது. இரட்டையர்கள் இணைந்தால் இரட்டை இலை கிடைக்கும். இது தேர்தல் கமி‌ஷனின் திட்டமில்லை. எதார்த்தமான உண்மை.

கேள்வி:– ‘பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு தர மத்திய அரசு மறுக்கிறது, தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது’ என்று காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்திருக்கிறாரே?

பதில்:– இது தவறான குற்றச்சாட்டு. எந்த மாநிலமாக இருந்தாலும் சரி, முழு ஒத்துழைப்பை மத்திய அரசு அளித்து வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆலமரம் போல வேரூன்றி இருப்பதாக அவர் பேசிவருகிறார். முதலில் தனது கட்சி பிரச்சினைகளை அவர் கவனிக்கட்டும், எதற்காக பிற கட்சிகளை பற்றி அவர் யோசிக்கிறார்? என்பது தெரியவில்லை.

கேள்வி:– முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்திக்க அமித்ஷா தமிழகம் வருகிறாரா?

பதில்:– இல்லை. பா.ஜ.க.வின் அமைப்பு ரீதியான நிகழ்ச்சிகளில் பங்கேற்கத்தான் அமித்ஷா தமிழகம் வருகிறார். 22, 23–ந்தேதிகளில் சென்னையிலும், 24–ந்தேதி கோவையிலும் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்கிறார்.

கேள்வி:– அரசுக்கு எதிராக தேவைப்பட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

பதில்:– அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வருவதில், அவருக்கே நம்பிக்கை இல்லை என்று தோன்றுகிறது. அதனால் தான் ‘தேவைப்பட்டால்’ என்ற வார்த்தையை உபயோகித்திருக்கிறார். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்ற போகிறார்களா? அல்லது மீண்டும் சட்டையை கிழித்துக்கொண்டு வரப்போகிறார்களா? என்பது தான் மக்களின் கேள்வியாக இருக்கிறது.

கேள்வி:– ‘நீட்’ தேர்வை மத்திய அரசு திணிக்க பார்க்கிறதா?

பதில்:– ‘நீட்’ தேர்வு என்பது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு. ‘நீட்’ தேர்வு என்பது ஏதோ பா.ஜ.க.வின் சூழ்ச்சி என்றெல்லாம் கூறி வைகோ, மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார்கள். மாணவர்களை யாரும் குழப்ப வேண்டாம்.

மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.

மேலும் செய்திகள்