மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்

மக்கள் நலப்பணியாளர்கள் தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் மீது ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால தடை தொடரும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2017-08-11 23:30 GMT

புதுடெல்லி,

முந்தைய தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேர் கடந்த 2011–ம் ஆண்டு பணியிலிருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என 2014–ம் ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. அக்டோபர் மாதத்திற்குள் பணி வழங்காவிட்டால் ஊதியத்தை மட்டுமாவது வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதில், பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க முடியாது எனவும், தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவதில் எந்த உபயோகமும் இல்லை எனவும் கூறியிருந்த தமிழக அரசு, சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தது.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் அனில் ஆர்.தவே, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து 2014 செப்டம்பர் 23–ந் தேதியன்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் முகுல் ஆர்.ரோகத்கி, யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள் தங்கள் வாதத்தில், மக்கள் நலப்பணியாளர் நியமனம் அனைத்தும் தி.மு.க. ஆட்சியில் அரசியல் நோக்கில் நடந்தவை. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது என்று தெரிவித்தனர்.

இதற்கு மக்கள் நலப்பணியாளர் சங்கம் சார்பில் வாதிட்ட மூத்த வக்கீல் பி.வில்சன், தி.மு.க. ஆட்சியில் 2008–ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் அனைவரும் ஜெயலலிதா ஆட்சியின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போதும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இந்த பணியாளர்களின் நலனை கருத்தில் கொள்ள தமிழக அரசு மறுத்து வருகிறது என்று வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியான காரணங்களில் உள்ளே போகவிரும்பவில்லை என்று கூறினர். பின்னர், மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இடைக்கால தடை தொடரும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்