பெண்களின் கருத்து கேட்காமலேயே சட்டங்கள் இயற்றப்படுகிறது பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு

உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் பெண்களின் கருத்து கேட்கப்படாமலேயே சட்டங்கள் இயற்றப்படுவதாக பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

Update: 2017-08-09 22:30 GMT
சென்னை,

தி.மு.க. எம்.பி. கனிமொழி பாராளுமன்றத்தில் பேசியதாவது:-

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தையும், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் நினைவு கூர்வதில் நாம் அனைவரும் பெருமையடைகிறோம். ஆனால் இந்தியாவில் இன்றும் தீண்டாமை இருக்கிறது. தீண்டாமையை எதிர்த்து போராடி வருகிறோம். பல மாநிலங்களில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணக் கூட முடியாத நிலைதான் இருக்கிறது. இப்போது கூட நாட்டின் பல இடங்களில் கவுரவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று பாருங்கள். இதற்காக நாம் அவமானப்பட வேண்டும்.

ஒவ்வொரு அரசும் புதிய கல்விக் கொள்கையை எடுத்து வருகின்றன. ஆனால் நமது பிள்ளைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக செல்கின்றனவா? நமது பிள்ளைகள் என்ன கற்கின்றன என்பது குறித்து நாம் உண்மையிலேயே அக்கறைப்படுகிறோமா? விவசாயிகளின் நிலையை எண்ணிப்பாருங்கள். ஆறுகளை இன்னமும் இணைக்க முடியவில்லை. நதிநீர் பங்கீட்டை மாநிலங்களுக்குள் செய்ய முடியவில்லை.

நமது நாட்டின் ஐம்பது சதவிகித மக்கள் மோசமாக நடத்தப்படுகையில் சுதந்திரத்தைப் பற்றி நாம் பெருமையாக பேச முடியாது. சமீபத்தில் சண்டிகரில் ஒரு பெண் துரத்தப்பட்ட சம்பவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அந்தப் பெண் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். பாலியல் வன்முறையோ, துன்புறுத்தலோ, ஆசிட் வீச்சு சம்பவமோ! எதுவாக இருந்தாலும் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்தான் கேள்விக்குள்ளாக்கப்படுகிறாள். இதற்காக நாம் அவமானப்பட வேண்டாமா?

அந்தப் பெண்ணை பாதுகாப்பது நமது கடமை இல்லையா? இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்னமும் நம்மால் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை கூட சட்டமாக்க முடியவில்லை. இதற்கான போராட்டங்களை நாம் அனைவருமே பார்த்துள்ளோம். பெண்களுக்கான உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் சட்டங்களை இயற்ற நமக்கு என்ன உரிமை இருக்கிறது. ஆனால் பெண்களின் கருத்து கேட்கப்படாமலேயே தொடர்ந்து சட்டங்கள் இயற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

உண்மையான சிறை என்பது அச்சத்தினால் ஏற்படுவது. எனவே அச்சத்திலிருந்து வெளிபடுவதுதான் உண்மையான சுதந்திரம். நமது பெண்கள், தலித்துகள், விளிம்புநிலை மக்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் எதிர்காலத்தை குறித்த அச்சத்தில் இருந்து என்று வெளியேறுகிறார்களோ, அன்றுதான் நமக்கு உண்மையான சுதந்திரம்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

மேற்கண்ட தகவல்கள் கனிமொழி எம்.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்