நடிகை காஜல் அகர்வால் வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

எண்ணெய் நிறுவனத்திடம் ரூ.2½ கோடி இழப்பீடு கேட்டு நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.;

Update: 2017-08-09 22:00 GMT
சென்னை,

ஒப்பந்தத்தை மீறி விளம்பர படத்தை வெளியிட்டதற்காக, எண்ணெய் நிறுவனத்திடம் ரூ.2½ கோடி இழப்பீடு கேட்டு நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

நடிகர் விஜய் நடித்த ‘ஜில்லா’, நடிகர் தனுஷ் நடித்த ‘மாரி’ உள்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

வி.வி.டி. தேங்காய் எண்ணெய் விளம்பரத்தில் 2008-ம் ஆண்டு நடித்தேன். இந்த விளம்பர காட்சியை 2008-ம் ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி முதல் 2009-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி வரையில் மட்டுமே ஒளிபரப்பவேண்டும் என்று அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தேன். ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி விளம்பர படம் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டது.

கடந்த 2011-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, தனியார் டி.வி. சேனல்களில், நான் நடித்த விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது. எனவே, ஒப்பந்தத்தை மீறி விளம்பர படத்தை ஒளிபரப்பியதற்காக ரூ.2½ கோடியை எனக்கு இழப்பீடாக வழங்க அந்த எண்ணெய் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும். விளம்பர படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த எண்ணெய் நிறுவனம், ரூ.3 லட்சத்தை பெற்றுக்கொண்டு தான் காஜல் அகர்வால் விளம்பரத்தில் நடித்தார். ஒப்பந்தத்தை மீறி நாங்கள் செயல்படவில்லை என்று கூறியிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ரவீந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

விளம்பர படத்தின் காப்புரிமை தற்போது எதிர்மனுதாரரான எண்ணெய் நிறுவனத்திடம் உள்ளது. காப்புரிமை சட்டம் விதி 26-ன்படியும், விளம்பர படம் தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து 60 ஆண்டுகளுக்கு அதன் மீதான உரிமை, காப்புரிமை பெற்றவர்களுக்கு சொந்தமாகும்.

தற்போது, இந்த விளம்பர படத்தின் மீதான உரிமை, 60 ஆண்டுகளுக்கு எண்ணெய் நிறுவனத்திடம் உள்ளது. அப்படி இருக்கும் போது, ஒரு ஆண்டு மட்டுமே விளம்பர படத்தை வெளியிட வேண்டும் என்று மனுதாரர் கூறுவதையும், அதை மீறியதாக ரூ.2½ கோடி இழப்பீடு கேட்பதையும் ஏற்க முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்