சுதந்திர தினத்தையொட்டி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யவேண்டும் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

சுதந்திர தினத்தையொட்டி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று மத்திய–மாநில அரசுகளுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2017-08-08 19:15 GMT
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத்தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டாலும், மிக கொடுமையான தண்டனையை அவர்கள் அனுபவித்து வருகின்றனர். தண்டனை குறைப்பு வழங்கப்பட்ட அடுத்த வாரமே 7 தமிழர்களையும் விடுதலை செய்யப்போவதாக அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

ஆனால், அதன்பின் 3½ ஆண்டுகள் ஆகியும் 7 பேருடைய விடுதலை தாமதமாகிக்கொண்டே செல்கிறது.


இவர்களில் பேரறிவாளன் ஏராளமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ‘பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்று வாக்குறுதியளித்தார். ஆனால், ஒரு மாதமாகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பேரறிவாளன் வி‌ஷயத்தில் ஆட்சியாளர்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது.

பேரறிவாளனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக பரோலில் விடுவிக்கவேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும், வரும் 15–ந் தேதி சுதந்திர தினத்தையொட்டி நிரந்தரமாக விடுதலை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய–மாநில அரசுகள் மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இதேபோல டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஜூலை மாதத்துக்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. பல்கலைக்கழகத்தின் நிதி நிலையை மேம்படுத்த ஏராளமான யோசனைகளை பா.ம.க. தெரிவித்துள்ளது.

ஆனால், அவற்றையெல்லாம் செயல்படுத்துவதில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இன்றைக்குள் (புதன்கிழமை) ஜூலை மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படவேண்டும். நிதி நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்