சுதந்திரதின விழாவையொட்டி சென்னையில், கோட்டைப்பகுதியில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் சுதந்திர தின விழா தினத்தன்றும், சுதந்திர தின விழா பாதுகாப்பு ஒத்திகையையொட்டியும் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Update: 2017-08-07 21:56 GMT

சென்னை,

சென்னை கோட்டைப்பகுதியில் 8, 10 மற்றும் 12–ந் தேதி ஆகிய 3 நாட்களும் சுதந்திரதின விழா பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. இதையொட்டி 3 நாட்களும் காலை 6.30 மணி முதல் ஒத்திகை முடியும் வரை கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

போக்குவரத்து மாற்றம் விவரம் வருமாறு:–

* நேப்பியர் பாலத்திலிருந்து போர் நினைவுச்சின்னம் வரை அமையப்பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச்சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதிவரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்படும்.

* காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.

* பாரிமுனையிலிருந்து, ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.

* அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், என்.எஸ்.சி. போஸ் சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம். முத்துசாமி சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள், அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.

மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் வருகிற 15–ந் தேதி அன்று சுதந்திர தின விழா நடைபெறும்போதும் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை அமல்படுத்தப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக வாகனங்களில் செல்வோர் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் பற்றியும் போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:–

* சிவப்பு மற்றும் பர்பிள் வண்ணத்தில், வாகன அடையாள அட்டை வைத்திருப்போர், காலை 8 மணி வரை ராஜாஜி சாலை வழியாக சென்று, தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கிக்கொண்டு, வாகனத்தை கோட்டை வளாகத்தில் நிறுத்த வேண்டும். ஆனால், இதே அடையாள அட்டை வைத்திருப்போர் காலை 8 மணிக்கு பின் கொடிமரச்சாலை, ஜார்ஜ் கேட் வழியாக கோட்டையை அடைய வேண்டும்.

* நீல மற்றும் பிங்க் வண்ணத்தில் வாகன அடையாள அட்டை வைத்திருப்போர், கொடிமரச்சாலை ஜார்ஜ் கேட் வழியாகவோ அல்லது முத்துசாமி பாலம், எஸ்பிளனேடு சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாகவோ சென்று தலைமைச் செயலக வெளிவாயில் அருகே இறங்கிக்கொண்டு, வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிர்புறமுள்ள பொதுப்பணித்துறை வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

* அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர், போர்நினைவுச் சின்னம் அருகில் இறங்கிக்கொண்டு, வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்த வேண்டும்.

* கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை ஏற்றிவரும் மாநகரப் பேருந்துகள் மாணவர்களை, போர் நினைவுச்சின்னம் அருகே இறக்கிவிட்டபின் போர் நினைவுச்சின்னம் அருகில் உள்ள தீவுத்திடலில் வாகனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தகவல்கள் போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்