காவல்துறைக்கான கட்டிடங்கள்: 228 காவலர் குடியிருப்புகள், 6 காவல் நிலையங்கள்
தமிழகம் முழுவதும் காவல்துறைக்கான கட்டிடங்களான 228 காவலர் குடியிருப்புகள், 6 காவல் நிலையங்களை முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 7 கோடியே 70 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 80 காவலர் குடியிருப்புகளை முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தலைமை செயலகத்தில் 7–ந் தேதியன்று (நேற்று) காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் 15 குடியிருப்புகள், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் 25 குடியிருப்புகள், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 30 குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் 45 குடியிருப்புகள் மற்றும் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் மேற்கில் 33 குடியிருப்புகள் என 18 கோடியே 65 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 148 காவலர் குடியிருப்புகள்;சென்னை பெருநகரம், டி–15 எஸ்.ஆர்.எம்.சி. ஐயப்பன்தாங்கல் மற்றும் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையம், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையம், செங்கிப்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர், திருச்சி மாவட்டம் பாரத மிகுமின் நிறுவனம் (பி.எச்.இ.எல்.) ஆகிய இடங்களில் 4 கோடியே 10 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 காவல் நிலையங்கள்;சென்னை பெருநகரம் புனித தோமையார் மலையில் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை இணை ஆணையர் தெற்குக்கான நிர்வாக கட்டிடம் என மொத்தம் 32 கோடியே 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 228 காவலர் குடியிருப்புகள், 6 காவல் நிலையங்கள் மற்றும் இணை ஆணையர் தெற்குக்கான நிர்வாக கட்டிடம் ஆகியவற்றை முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.