கோவளத்தில், ஜனவரி 6-ந்தேதி ஜல்லிக்கட்டு 300 காளைகள் பங்கேற்கின்றன

ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 6-ந்தேதி முதல் நடத்தப்படும் என்று ஜல்லிக்கட்டு பேரவை அறிவித்துள்ளது.

Update: 2017-08-04 22:00 GMT
சென்னை,

ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர், சென்னை ஜல்லிக்கட்டு பேரவை நிறுவனர் அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் சென்னையில் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை மெரினாவில் நடந்த ஜனவரி புரட்சி மூலம் தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டியை மீட்டெடுத்து உள்ளோம். பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னையை அடுத்த கோவளத்தில் (காஞ்சீபுரம் மாவட்டம்) ஜனவரி 6-ந்தேதி முதல் ஜல்லிக்கட்டு போட்டி சட்ட விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட உள்ளது. இதில், 17 மாவட்டங்களில் இருந்து 300 காளைகள் கொண்டுவரப்படும். மேலும் இந்த போட்டியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பார்கள். காளையை அடக்குபவர்களுக்கு மொத்தம் ரூ.50 லட்சம் வரையிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

100 ஏக்கர் பரப்பளவு இடத்தில் நடத்தப்பட உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதற்கு இணையதளம் மற்றும் ‘மிஸ்டுகால்’ மூலம் இலவச நுழைவுச்சீட்டு (பாஸ்) வழங்க திட்டமிட்டுள்ளோம். நுழைவுச்சீட்டு பெற விரும்புபவர்கள் ஆதார் கார்டு உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை கண்டிப்பாக வைத்திருக்கவேண்டும்.

அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டியை சென்னையில் நடத்த உள்ளோம். ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க தமிழக முதல்-அமைச்சர், மத்திய மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். நாங்கள் நடத்த உள்ள ஜல்லிக்கட்டு போட்டி அரசியலுக்கு அப்பாற்பட்ட போட்டி. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், லாரன்ஸ் உள்பட அனைவருக்கும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்