கோவையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் பதுங்கலா? 2 வாலிபர்களை பிடித்து விசாரணை

கோவையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் பதுங்கி உள்ளார்களா? என்ற சந்தேகத்தின் பேரில் 2 வாலிபர்களை பிடித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-08-03 22:15 GMT
கோவை,

கோவை கரும்புக்கடை, ஆசாத்நகர் பள்ளிவாசல் வீதியை சேர்ந்த முகமது அப்துல்லா (வயது 27), கோவை ஜி.எம்.நகர் கோட்டைபுதூரை சேர்ந்த அப்துல் ரகுமான் (24) ஆகியோர் முகநூல் மூலம் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக தகவல் வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கூடுதல் துணை சூப்பிரண்டு சவுகத் அலி தலைமையில் 15 பேர் கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று கோவை சென்றனர்.

அவர்கள் 2 பிரிவுகளாக நேற்று மாலை 5 மணியளவில் முகமது அப்துல்லா, அப்துல்ரகுமான் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். முகமது அப்துல்லா கரும்புக்கடை பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மற்றும் இணையதள மையம் நடத்தி வருகிறார். அந்த கடையிலும் சோதனை நடைபெற்றது.

இதில், முகமது அப்துல்லா என்பவரது வீட்டில் இருந்து இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த ஜாகீர்நாயக் தொடர்பான டி.வி.டி., மத பிரசங்கம் தொடர்பான 77 டி.வி.டி.க்கள், ஒரு மடிக்கணினி, 2 செல்போன்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அப்துல்ரகுமான் வீட்டில் இருந்து செல்போன்கள் மற்றும் சில டி.வி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

2 பேர் பிடிபட்டது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் என்ற சந்தேகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 2 பேரின் வீடுகளில் இருந்தும் டி.வி.டி.கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாஸ்போர்ட்டுகளையும் கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. 2 பேரும் கைது செய்யப்படுவார்களா? அல்லது விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்படுவார்களா? என்று பின்னர்தான் முடிவு செய்யப்படும்’ என்றனர்.

மேலும் செய்திகள்