கோவிலில் ஐம்பொன் சிலைகள் மாயம்: அறநிலையத்துறையினர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் மாயமானது தொடர்பாக அறநிலையத்துறை அலுவலர்கள் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2017-08-03 22:00 GMT
திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூரில் பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள கோவில்களின் சிலைகளை பாதுகாப்பு கருதிவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி கீழமணக்குடி விஸ்வநாதர் கோவிலில் இருந்து விநாயகர், புஷ்கரணி, வள்ளி-தெய்வானை. சந்திரசேகர் அம்மன் ஆகிய 5 ஐம்பொன் சிலைகளும், ரெங்கராஜபுரம் கிராமத்தில் உள்ள இடும்பேஸ்வரர் கோவிலில் இருந்து விநாயகர் சிலையும் பாதுகாப்பு கருதி பசுபதீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2013-ம் ஆண்டு பசுபதீஸ்வரர் கோவிலில் இருந்த இந்த 6 ஐம்பொன் சாமி சிலைகளும் மாயமாகி விட்டதாகவும், இதுகுறித்து மறைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் வசித்து வரும் பந்தநல்லூரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்படி, சிலைகள் மாயமானது குறித்து கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி பந்தநல்லூர் போலீசார் இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் கஜேந்திரன், கும்பகோணம் உதவி ஆணையர் ஞானசேகரன், கோவில் செயல் அலுவலர் காமராஜ், முன்னாள் செயல் அலுவலர் ராமச்சந்திரன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பசுபதிபிள்ளை, மனோகரன் பிள்ளை, கோவில் முன்னாள் குருக்கள் ஜெகதீஷ், குருக்கள் சேகர், தலைமை எழுத்தர் ராஜா, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சரவணன் ஆகிய 10 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் கோவில் சிலைகள் மாயமானது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் மேற்கண்ட 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் கோவில் செயல் அலுவலர் காமராஜ், தலைமை எழுத்தர் ராஜா, கோவில் அறங்காவலர்கள் பசுபதிபிள்ளை, மனோகரன் பிள்ளை ஆகிய 4 பேரை பணியிடை நீக்கம் செய்து மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்