இளம்பெண் பஸ் டிரைவரிடம் நூதன முறையில் ஸ்கூட்டர் பறிப்பு வேப்பேரியில் பரபரப்பு சம்பவம்

இளம்பெண் பஸ் டிரைவரிடம் நூதன முறையில் ஸ்கூட்டர் பறிப்பு வேப்பேரியில் பரபரப்பு சம்பவம்

Update: 2017-08-03 21:15 GMT
சென்னை,

சென்னை வேப்பேரி பகுதியில் தங்க சங்கிலி பறிக்கப்பட்டதாக நாடகமாடிய இளம்பெண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நூதனமான முறையில் பஸ் டிரைவரிடம் ஸ்கூட்டரை பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் பற்றி விவரம் வருமாறு:–

சென்னை கொசப்பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30). இவர் சென்னை மாநகர பஸ் போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்க்கிறார். இவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் தனது ஸ்கூட்டரில் வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார்.

ஈ.வி.கே.சம்பத் சாலையில் இருந்து ஈ.வெ.ரா. சாலையில் சிக்னல் அருகே திரும்பினார். அப்போது அங்கே இளம்பெண் ஒருவர் தனது தங்க சங்கிலியை 2 பேர் பறித்து சென்றுவிட்டார்கள் என்று கூச்சல் போட்டபடி நின்று கொண்டிருந்தார்.

2 மர்ம ஆசாமிகள் ஈ.வெ.ரா.சாலையில் ரித்தர்டன் சாலை சந்திப்பு சிக்னலை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். கிருஷ்ணமூர்த்தி தனது ஸ்கூட்டரில் அவர்களை விரட்டிச் சென்றார். ரித்தர்டன் சாலை சந்திப்பு சிக்னல் அருகே மர்ம ஆசாமிகள் இருவரையும் கிருஷ்ணமூர்த்தி மடக்கிப் பிடித்தார். அப்போது திடீரென்று அந்த மர்ம ஆசாமிகளில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணமூர்த்தியை குத்துவதற்கு பாய்ந்தார். இதை எதிர்பாராத கிருஷ்ணமூர்த்தி தனது ஸ்கூட்டரை அங்கே போட்டுவிட்டு சற்று விலகி நின்றார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம ஆசாமிகள் இருவரும் கிருஷ்ணமூர்த்தியின் ஸ்கூட்டரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். தங்க சங்கிலி பறித்ததாக கூச்சல் போட்ட இளம்பெண்ணையும் காணவில்லை. அவரும் மாயமாகி விட்டார்.

அதன்பிறகுதான் கிருஷ்ணமூர்த்திக்கு உண்மை தெரிய வந்தது. தங்க சங்கிலி பறிக்கப்பட்டதாக இளம்பெண் நாடகமாடியதும், அவருடைய கூட்டாளிகள் இருவரும் ஸ்கூட்டரை பறித்துச் சென்றதும் ஒரு திட்டமிட்ட நூதன வழிப்பறி நாடகம் என்று தெரிய வந்தது.

கிருஷ்ணமூர்த்தி இந்த சம்பவம் தொடர்பாக வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாடகமாடிய இளம் பெண்ணையும், ஸ்கூட்டரை பறித்துச் சென்ற 2 மர்ம ஆசாமிகளையும் தேடி வருகிறார்கள். சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ஸ்கூட்டர் பறிக்கப்பட்ட சம்பவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்