என்ஜினீயரிங் படிப்பில் ஒரு இடம் கூட வீணாகக்கூடாது டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

என்ஜினீயரிங் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சென்றாலும் என்ஜினீயரிங் படிப்பில் ஒரு இடம் கூட வீணாகக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-08-03 19:15 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு செய்த அபத்தங்கள் மற்றும் குளறுபடிகளால் என்ஜினீயரிங், கால்நடை அறிவியல், வேளாண் அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்கள் யாருக்கும் பயன்படாமல் காலியாக கிடக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு இதை உறுதி செய்கிறது.

ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எவரேனும் மருத்துவப் படிப்பில் சேர்ந்தால் அதனால் ஏற்படும் காலியிடங்கள் நிரப்பப்படாது; அவை காலியாகவே இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் தனியார் கல்லூரிகளில் இவ்வாறு ஏற்படும் காலியிடங்களை கல்லூரி நிர்வாகங்கள் நிரப்பிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் மோசமான அறிவிப்பு ஆகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கதும் கூட.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இடங்கள் காலியானால் அதை தகுதியானவர்களைக் கொண்டு நிரப்புவது தான் முறை. அதை விடுத்து காலியிடங்களை அப்படியே வீணாக்குவது முறையல்ல.

வேளாண்மை கல்லூரிகளின் சிக்கல் வித்தியாசமானது. முதல் கட்ட கலந்தாய்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் விலகும் போது ஏற்படும் காலியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கும். ஆனால், அதில் அதிக மதிப்பெண் எடுத்து தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்க முடியாது. மாறாக அவர்களை விட குறைந்த மதிப்பெண் எடுத்து, இதுவரை எந்த கல்லூரியிலும் சேராதவர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு அரசு கல்லூரிகளில் சேர்ந்து இலவசமாக படிப்பார்கள். ஆனால், அதிக மதிப்பெண் எடுத்தவர்களோ தனியார் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி படிக்க வேண்டும். இது எந்த வகையான சமூக நீதி?.

இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் காரணம் மருத்துவப் படிப்புக்கு முன்பாக மற்ற படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தியது தான். எனவே, மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேருவதால் ஏற்படும் காலியிடங்களை அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். இது மிகவும் நீண்ட நடைமுறை என்றாலும் தவிர்க்க முடியாததாகும். எனவே, ஒரு மாணவர் சேர்க்கை இடம் கூட வீணாகாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ‘‘சென்னை கடற்கரை சாலையில் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நின்று கொண்டிருந்த சிவாஜி கணேசனின் சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது நீதிமன்ற ஆணைப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று கூறப்பட்டாலும் கூட, இதன் பின்னணியில் சில சதிகள் அரங்கேற்றப்பட்டதை மறுக்க முடியாது’’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்