தமிழகத்தில் தான் சுத்தமான பால் விற்பனை செய்யப்படுகிறது ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்

கோவா, புதுச்சேரிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் சுத்தமான பால் விற்பனை செய்யப்படுகிறது என்று தனியார் பால் நிறுவனங்களின் சார்பில் ஆஜரான வக்கீல் ஐகோர்ட்டில் கூறினார்.

Update: 2017-08-02 21:45 GMT
சென்னை,

தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில், புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டியளித்தார். இதையடுத்து ராஜேந்திரபாலாஜியிடம் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டும், பால் குறித்து அவர் பேசுவதற்கு தடை கேட்டும், சென்னை ஐகோர்ட்டில் ஹட்சன், டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘ஆதாரம் இல்லாமல் தனியார் நிறுவன பால் குறித்து அமைச்சர் கருத்து தெரிவிக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் பால் நிறுவனங்களின் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டார். அவர் தன் வாதத்தில் கூறியதாவது:-

தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் உள்ளது என்பதற்கு எந்த ஒரு ஆதாரங்களும் இல்லாமல் அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். இவர் சாதாரண நபர் அல்ல. ஒரு நுகர்வோர் அமைப்போ, தனிநபரோ, இதுபோல குற்றம் சுமத்தினால் பிரச்சினை இல்லை. ஆனால், ஒரு அமைச்சரே இப்படி கூறுவதால், அது மக்கள் மத்தியில் உண்மை என்று நம்பப்படுகிறது.

அரசு நடத்தும் ஆவின் நிறுவனத்துக்கு, தனியார் பால் நிறுவனங்கள் தொழிலில் போட்டியாக இருப்பதால், இப்படி அமைச்சர் குற்றம் சுமத்துகிறார். மேலும், தனியார் நிறுவனங்களின் பாலின் மாதிரிகளை எடுத்து மாதவரத்தில் உள்ள ஆவின் ஆய்வகத்தில் சோதனைக்கு அனுப்பியுள்ளார்.

உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்தபிறகு, மாதவரம் ஆய்வகத்துக்கு சோதனையிடும் அதிகாரம் இல்லை. தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலை, உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களது சோதனையில் இதுவரை எந்த ஒரு குறையும் கண்டுபிடிக்கப்படவில்லை.

நாட்டில், சுத்தமான, கலப்படம் இல்லாத பால், புதுச்சேரி மற்றும் கோவாவில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக, தமிழகம், ஆந்திர மாநிலங்களில் பால் விற்பனை செய்யப்படுகிறது. அப்படி இருக்கும்போது, அமைச்சர் தேவையில்லாமல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கில் அமைச்சர் சார்பில் வக்கீல் ராகவாச்சாரி வாதிடுவதற் காக, வழக்கு விசாரணையை 4-ந் தேதிக்கு (வெள்ளிக் கிழமை) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்